டெல்லியில் காற்றின் தரம் மோசமான பிரிவில் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்லியில் இன்று முதல் அவசரநிலை செயல் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் மோசமான பிரிவில் இருப்பதாகவும் வரும் நாட்களில் இது மேலும் மோசமான நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 224 புள்ளிகள் அளவில் மிக மோசமான பிரிவில் இருந்ததாக மத்திய அரசின் காற்றின் தரம் மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்தது.
According to the latest AQI data, major pollutants PM 2.5 is at 168 (moderate) and PM 10 at 224 (poor) in #Delhi's Lodhi Road area. pic.twitter.com/Z5cTQeqsqx
— ANI (@ANI) October 15, 2018
இந்நிலையில் காற்றின் தரமானது மோசமான பிரிவில் இருப்பதால் காற்று மாசை எதிர்கொள்ள இன்று முதல் அவசரநிலை செயல் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது, வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரிப்பது, மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சாலைப் பகுதிகளை இயந்திரங்கள் மூலம் அடிக்கடி தூய்மைப்படுத்துவதை அதிகரிப்பது, சாலைகளில் மீது நீர்த் தெளிப்பு நடவடிக்கையை மேற்கொள்வது,அத்தியாவசியப் பொருள் ஏற்றிவரும் வாகனங்கள் தவிர பிற லாரிகளை டெல்லிக்குள் நுழைவதற்குத் தடை விதிப்பது போன்ற அவசர நிலை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.