“பாரோர் பலருள் சீரோர் சிலரே, சீரோர் சிலரில் சீலர் இவரே” என்ற வாக்கினிற்கேற்ப உலகில் பல மாமனிதர்கள் பிறந்துள்ளனர். அவர்களுல் இந்தியாவின் தென் கோடியில் பிறந்து உலகின் அனைத்து மூலைகளிலும் நம் நாட்டின் பெயரை மிளிரச் செய்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமும் ஒருவர். ‘மக்கள் குடியரசுத் தலைவர்’ என்ற பெயரோடு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு நம் நாட்டின் வரலாற்றில் தனிச்சிறப்புண்டு. ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் ஏபிஜே அப்துல் கலாம், 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தபோது ஜூலை 27ஆம் தேதி 2015ஆம் ஆண்டு அவரது 83 ஆவது வயதில் காலமானார்.
பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான ஏரோநாட்டிக்ஸ் துறையில் கலாம் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். இந்த துறையில் அவர் ஆற்றிய பணிகளும், அவரது முயற்சிகள் மற்றும் திறமையால், இந்த துறையில் இந்தியா அடைந்த வெற்றியும் அவருக்கு 'ஏவுகணை நாயகன்' என்ற பட்டத்தை பெற உதவியது.
‘கனவு காணுங்கள், உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் லட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும்' என்று கூறி இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளித்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். சோம்பேறித்தனத்தை விலகச்செய்யும் விதமாக ‘உறங்கும் போது காண்பதல்ல கனவு, உறங்கவிடாமல் செய்வதே கனவு’ என்று உறுதியாக சொன்னவர் அப்துல் கலாம்.
மேலும் படிக்க | அரசியல் கட்சிகள் அள்ளி விடும் ‘இலவச’ வாக்குறுதிகள்; SC அளித்த முக்கிய உத்தரவு
அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், இயற்பியல் மற்றும் விண்வெளி பொறியியல் படித்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆகியவற்றில் 40 ஆண்டுகள் விஞ்ஞானி மற்றும் அறிவியல் நிர்வாகியாக பணியாற்றினார்.
இந்தியாவின் சிவில் விண்வெளித் திட்டம் மற்றும் இராணுவ ஏவுகணை அமைப்புகளில் கலாம் பல்வேறு மேம்பாடுகளை கொண்டு வந்தார். இதன் காரணமாக அவர் வெகுவாக பாராட்டப்பட்டார். 1998 ஆம் ஆண்டு அடல் பிஹாரி பாஜ்பாய் அரசாங்கத்தின் கீழ் பொக்ரான்-II அணு ஆயுத சோதனைகளில் அவர் முக்கிய நிறுவன மற்றும் தொழில்நுட்ப பங்கை வகித்தார். இந்த சாதனை உலக அணு ஆயுத தளத்தில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய மற்றும் அசைக்கமுடியாத இடத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.
2002 இல் கலாம் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்த பதவியில் இருந்த ஐந்தாண்டு காலமும் ஒரு வித்தியாசமான, எளிய, யாரும் அணுகக்கூடிய ஒரு குடியரசுத் தலைவராக இருந்தார். அவரது எளிமை, இனிமையான பண்புகள் மற்றும் அணுகுமுறை ஆகியவற்றின் காரணமாக 'மக்கள் ஜனாதிபதி' என்று பரவலாகக் குறிப்பிடப்பட்டார்.
கலாமின் மரணம்
கலாம் ஜூலை 27, 2015 அன்று இயற்கை எய்தினார். ஷில்லாங்கில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் அவர் மேடையில் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தபோது இறந்தார். அவருக்கு மிகவும் பிடித்தது மாணவர்களுடன் கலந்துரையாடுவது. அந்த தருணத்திலேயே அவர் இறந்தது அவரது ஆழ்மனதின் ஆசை எவ்வளவு உறுதியாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மனித குலத்திற்கு கலாமின் பங்களிப்பு மகத்தானது. குறிப்பாக, பள்ளி மாணவர்களின் உள்ளத்தில் தனது எழுத்துக்களால் அவர் பல வித ஆக்கப்பூர்வமான விதைகளை விதைத்துள்ளார். ஒரு அறிவியல் நிர்வாகியாக இருந்து நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவராக அவர் உயர்ந்தது அவரது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். விண்வெளித் துறையில் இந்தியாவை ஒரு உயர்ந்த இடத்தில் நிறுத்தியவர்களின் பட்டியலில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய, முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது.
மேலும் படிக்க | 28000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ