புதுடெல்லி: ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை விமர்சிப்பவர்களின் பிரச்சனை என்னவென்றால் அவர்களால் எதற்கும் தயாராக முடியவில்லை என்பதுதான் என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசிள்ளார்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை மன்மோகன் சிங் நேற்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
ரூ.500, 1000 நோட்டுகளை ஒழிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உரிய முன்னேற்பாடுகளை செய்து, தயார்நிலையில் இல்லை என்று அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் தயார்நிலைக்கு வரும் அளவுக்கு நாங்கள் கால அவகாசம் கொடுக்கவில்லையே என்பதுதான் அவர்களின் உண்மையான வேதனை என்று மோடி கூறினார்.
மேலும் அவர்களுக்கு 72 மணிநேரம் அவகாசம் அளித்திருந்தால் அவர்கள் மோடியை போன்று யாரும் கிடையாது என்று பாராட்டத் தொடங்கிவிடுவார்கள் என்றார் பிரதமர் மோடி.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தினால் அரசுக்கு பாதிப்பு கிடையாது .ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான போரில் பொதுமக்கள் ராணுவ வீரர்களாகி உள்ளனர் என்றும் பிரதமர் மோடி பாராட்டிள்ளார். நாட்டை 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பை தவறாக பயன்படுத்தி ஊழலில் மூழ்கிவிட்டனர் என்றார்.
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதனால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும் விதமாக பிரதமர் மோடி இவ்வாறு பேசிள்ளது மேலும் பிரச்சனையை எழுப்பிள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சிப்பவர்களுக்கு எதிரான தாக்குதலை தொடங்கினார்.
தற்போது நாட்டில் உள்ள 100 கோடி மக்களிடம் கைபேசிகள் உள்ளன, நாட்டின் கடைக்கோடி பகுதிகளிலும் கைபேசிகள் புழக்கத்தில் உள்ளன. கிராமத்தில் இருக்கும் மக்கள்கூட யாரும் சொல்லிக் கொடுக்காமல் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்கு பிறகு மாநகராட்சிகள் சுமார் ரூ 13,000 கோடி வரி பணம் சேகரித்தது என்று அரசியலமைப்பு தினமான இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.