ஜார்க்கண்ட் ’கருப்பு நாள்’..! சுரங்கத்தில் செத்து மடிந்த தொழிலாளர்கள் - சோக பின்னணி

ஜார்க்கண்ட், அப்போதைய பீகாரில் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற சுரங்க விபத்து, இந்திய வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாகவும், உலகளவில் 2வது மிக கோரமான சுரங்க விபத்தாகவும் பதிவாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 23, 2023, 07:56 PM IST
  • 1903 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற்ற சுரங்க விபத்துகளின் எண்ணிக்கை 277
  • இந்த காலகட்டத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,344
  • உலகிலேயே மிகப்பெரிய 2வது சுரங்க விபத்து தன்பாத் சுரங்க விபத்து. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 375.
  • 1906 ஆம் ஆண்டு பிரான்சில் ஏற்பட்ட சுரங்க விபத்து ஒன்றில் 1099 பேர் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் ’கருப்பு நாள்’..! சுரங்கத்தில் செத்து மடிந்த தொழிலாளர்கள் - சோக பின்னணி title=

நிலக்கரி பொதுவாக ‘கருப்புத் தங்கம்’ (Black Gold) என அழைக்கப்படுவதுண்டு. தங்கம் என்றாலும், கருப்புத் தங்கம் என்றாலும், அது பூமிக்கு வருவதற்கு குடிக்கும் ரத்தம், இன்று மட்டுமல்ல வரலாற்று நெடுகவே நிகழ்ந்துள்ளது. நீண்ட வரலாற்று நெடுந்துயரத்தை கொண்டிருக்கும் இந்த இரண்டுக்கும் எப்போதும் மவுசு குறைந்ததில்லை.  ’விலை மதிப்பில்லாதது, விலை மதிப்பில்லாதது’ என கூறுவதற்கு பின்னணி, பல உயிர்களின் காவு வாங்கிய பொருள் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுவதற்கு பயன்படுத்தும் வார்த்தை என்று தான் எடுத்துக் கொள்ள முடிகிறது. உலகளவில் பல இடங்களில் சுரங்க விபத்துகள் (Coal mine Accident) ஏற்பட்டிருந்தாலும், இன்றுவரை இந்தியாவின் மிகப்பெரிய சுரங்க விபத்தாகவும், உலகளவில் 2வது விபத்தாகவும் இருப்பது தன்பாத் சுரங்க விபத்து தான். 1906 ஆம் ஆண்டு பிரான்சில் ஏற்பட்ட சுரங்க விபத்து ஒன்றில் 1099 பேர் உயிரிழந்தது இன்றுவரை உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய சுரங்க விபத்து.

மேலும் படிக்க | கொரோனா பயம்... 3 ஆண்டுகளாக வெளியே வரவே இல்லை... நடுங்கவைக்கும் சம்பவம்!

1901 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நிலக்கரிச்சுரங்கம் தோண்டப்பட்டு, நிலக்கரிகள் எடுக்கப்படுகின்றன என்றாலும், 1975 ஆம் ஆண்டு தான் மிகப்பெரிய விபத்தை சந்திக்க நேர்ந்தது. அதுவரை 1968 ஆம் ஆண்டு டோரி (Dhori) பகுதியில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தே இந்தியாவில் மிகப்பெரிய விபத்தாக இருந்தது. அந்த விபத்தில் 268 பேர் உயிரோடு புதைக்கப்பட்டு பலியாகியிருந்தனர். அந்த விபத்தை விஞ்சும் வகையில், இப்போதைய ஜார்க்கண்ட் மாநிலம், அப்போதைய பீகார் மாநிலம் தன்பாத் (Dhanbad), சான்ஸ்நாளாவில் 1975, டிசம்பர் 27 ஆம் நாளில் மிக மோசமான எதிர்பாராத இந்த சுரங்க விபத்து ஏற்பட்டது.

ஐ.ஐ.எஸ்.சி.ஓ (IISco) -க்கு சொந்தமான அந்த நிலக்கரிச் சுரங்கத்தில், கைவிடப்பட்ட நிலையில் இருந்த நிலக்கரிச் சுரங்கத்துக்கு அருகாமையிலேயே மற்றொரு சுரங்கத்தில் நிலக்கரி எடுக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பூமிக்கடியில் சுமார் 291 மீட்டர் ஆழத்தில் 375 பேர் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளனர். திடீரென அருகில் இருந்த நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த சுரங்கத்தில் இருந்த நீர் முழுவதும், 80 அடி சுவரை உடைத்துக் கொண்டு தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த சுரங்கத்திற்குள் புகுந்தது. ஒரே ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கனஅடி நீர், தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த சுரங்கத்திற்குள் நிரம்பியது. 

மேலும் படிக்க | இந்தியாவை விட தங்கம் மிகவும் மலிவாக கிடைக்கும் உலகின் ‘சில’ நாடுகள்!

யாரும் எதிர்பாக்காத இந்த விபத்தால், இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளானது. நீரை வெளியேற்றுவதற்கான சரியான இயந்திரகள் இந்தியாவில் இல்லாததால் ரஷ்யா மற்றும் போலந்தில் இருந்து எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கடைசியாக, சிலரின் உடல்கள் எலும்புக் கூடுகளாக மட்டுமே கிடைத்தன. பெரும்பாலானோரை அடையாளம் காணமுடியவில்லை. டிசம்பர் 27, 1975, அந்த ஒரு நாள் 375 ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தை நிற்கதியாக மாற்றியது. 18 வயதுக்கும் குறைவான பெண்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் விதவைகளானார்கள். சொல்லொணாத் துயரில் மூழ்கிய குடும்பங்களுக்கு அரசு ஆறுதல் தெரிவித்ததுடன், உரிய நிதியுதவியும் வழங்கியது. தொழிலாளர்களை இழந்த குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு சுமார் 37 ஆண்டுகள் நடைபெற்று, இறுதி தீர்ப்பு வெளிவந்தது. 4 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அதில் 2 பேர் தீர்ப்பு வருவதற்கு முன்பே இறந்திருந்ததால், 2 பேர் மட்டுமே தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை ஒரு வருடம் சிறை. இதன்காரணமாக, ஜார்க்கண்டின் கருப்பு நாளாக டிசம்பர் 27 ஆம் தேதி மாறியது. 1903 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற்ற சுரங்க விபத்துகளின் எண்ணிக்கை 277. அதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,344. 2000 - 2014 ஆம் ஆண்டு வரை 7 விபத்துகள் ஏற்பட்டு 144 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க | ஆளுநராகும் மற்றொரு தமிழர்... ஜார்க்கண்டில் சி.பி. ராதாகிருஷ்ணன் - ஆளுநர் மாற்றம் முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News