காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளது. கர்நாடகாவில் தமிழர்களை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. துணை ராணுவப்படை அனுப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக அமைச்சரவை கூடி காவிரி விவகாரம் பற்றி விவாதித்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நடக முதல் மந்திரி சித்தாரமையா கூறியதாவது:- பெங்களூருவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து விவாதித்தோம். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அமல்படுத்துவோம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வன்முறைகளை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடக்கத்தில் இருந்தே நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கி கொண்டுதான் இருக்கிறோம். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதித்துதான் ஆக வேண்டும். 15 டி.எம்.சி தண்ணீர் விட உத்தரவிட்டால் அதை நடைமுறைப்படுத்ததான் வேண்டும். நாளை பிரதமர் மோடியை நானும் எனது அமைச்சரவை சகாக்களும் சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இடைக்கால தீர்ப்புதான். தீர்ப்பின் சாதக பாதக அம்சங்களை மேல் முறையீட்டில் எடுத்துரைப்போம். மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். உயிரிழப்புகளை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. தவிர்க்க முடியாத சூழலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படது என அவர் தெரிவித்தார்.