ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும் என ப. சிதம்பரத்திற்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிச்டா முகர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோன்று, தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார். அதில்,
"ஆம் ஆத்மி வென்றது, ஏமாற்று வேலை மற்றும் வெற்று கோஷம் தோல்வி அடைந்து உள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் டெல்லி மக்கள் பாஜகவின் ஆபத்து மிகுந்த பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் வகுப்புவாத அரசியல் திட்டங்களை தோற்கடித்து உள்ளனர்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிச்டா முகர்ஜி, ப. சிதம்பரம் வெளியிட்ட ட்விட்டர் செய்தியை பதிவிட்டு, அதற்கு கேள்வி எழுப்பும் வகையில் தனது பதிவை வெளியிட்டுள்ளார். அதில்.,
சரியான மரியாதையுடன் ஐயா, பாஜகவை வீழ்த்தும் பணி மாநில கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதா? அப்படி இல்லையென்றால், நமது தோல்வியை பற்றி கவலை கொள்ளாமல் ஆம் ஆத்மி வெற்றியை ஏன் நாம் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்? ஆம் என்றால், நம்முடைய மாநில காங்கிரஸ் கட்சிகளை மூடி விடலாம். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.