அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு விசாரணை: ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங் நேற்று (ஏப்ரல் 3, புதன்கிழமை) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் சிங் பாஜகவை கடுமையாகத் தாக்கி பேசினார். இது "ஆம் ஆத்மி கட்சி" என்று ஆவேசமாக பேசிய சஞ்சய் சிங், "இது கொண்டாட்டத்துக்கான நேரம் இல்லை. இது போருக்கான தருணம். நாம் ஒன்றிணைந்து போராடத் தயார் ஆக வேண்டும். சிறைக் கம்பிகள் உடைக்கப்பட்டு, நம் தலைவர்கள் வெளியே வருவார்கள் என்று தொண்டர்கள் மத்தியில் முழங்கினார். சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளதால், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கு ஆறுதல், உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், சஞ்சய் சிங்கைப் போல் மற்ற ஆம் ஆத்மி தலைவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு
மறுபுறம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) ஒத்திவைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஸ்வர்ணகாந்த சர்மா "நான் தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன்" என உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வைத்த வாதம்
அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்பொழுது அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி நீதிமன்றத்தில் வாதிட்டார். இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்பட அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாகும். ஆனால் தேர்தல் நேரத்தில் அரவிந் கெஜ்ரிவாலை கைது செய்வதற்கான ஒரே காரணம் அவரையும், அவரது ஆம் ஆத்மி கட்சியை முடக்குவதற்காக தான். இது அரசியலமைப்பின் கட்டமைப்பை மீறுவதாகும். பாஜகாவுக்கு சவாலாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை உடைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அதேநேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று அபிஷேக் சிங்வி கூறினார்.
நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வைத்த வாதம்
அமலாக்கத்துறை சார்பில் ஆஜாரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ். வி.ராஜூ, "அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் பணமோசடி குற்றம் முதன்மையாக உள்ளது என்றார். தற்போது மனுதாரர் மீதான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருக்கு, அதுமட்டுமில்லாமல், தேர்தல் நடைபெறும் காலத்தில் கைது செய்யக்கூடாது என கூறுவதற்கு விசாரணைக் கைதிகளுக்கு உரிமையில்லை என்று கூறினார். தேர்தலுக்கு முன்பு அரசியல் பிரமுகர் ஒருவர் கொலை செய்தால், அவரை கைது செய்யக்கூடாதா? அப்படியே கைது செய்தால் அது துன்புறுத்தலாக? கொலை செய்தவரை கைது செய்வது விதிமீறல் என எப்படி கூற முடியுமா? என அடுக்கடுக்கான வாதங்களை வைத்த அவர், குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வாதிட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
மதுபானக் கொள்கை தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மார்ச் 28 வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது திகார் சிறை இரண்டாம் எண் அறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன்
2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆறு மாதங்களாக சிறையில் இருந்த அவர், நேற்று (ஏப்ரல் 3, புதன்கிழமை) ஜாமீனில் வெளியே வந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ