டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு; பள்ளிகளுக்கு மேலும் 3 நாள் லீவு

Last Updated : Nov 7, 2016, 01:19 PM IST
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு; பள்ளிகளுக்கு மேலும் 3 நாள் லீவு  title=

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசால் பள்ளிகளுக்கான விடுமுறை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தலைநகரம் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசால் பொதுக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பள்ளிகளுக்கான விடுமுறை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக டெல்லியில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்றில் அதிக மாசு கலந்தது. இத்துடன், டெல்லியை ஒட்டி உள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அறுவடை முடிந்து பயிர்களின் கழிவுகளை எரிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் காற்றில் புகை மண்டலம் டெல்லி முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் குழந்தைகளும் வயதானவர்களும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்று மாசு நேற்று அதிகரித்து காணப்பட்டது. காற்றில் சராசரியாக இருக்க வேண்டிய மாசு அளவை விட 15 மடங்கு அதிக அளவில் மாசு கலந்துள்ளது. வழக்கமாக இதுபோல் மாசு ஏற்பட்டு புகை மூட்டம் எழுந்தால் ஒன்றிரண்டு நாட்களில் அது அடங்கிவிடும். ஆனால், ஒரு வாரத்துக்கும் மேலாக இப்போது டெல்லி நகரில் புகை மூட்டம் நிலவுகிறது. இந்த காற்று மாசு அடுத்த 3 நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் மேலும் 3 நாட்களுக்கு விடுமுறையை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் கூடியது. பிறகு அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-  பஞ்சாப், அரியானா மாநிலத்தில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியை அடர்த்தியான போர்வையாக புகை சூழ்ந்துள்ளது. கடந்தாண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு பயிர் கழிவுகளால் எழுந்துள்ள புகை அதிகளவில் உள்ளது. இதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இன்று முதல் புதன் கிழமை வரை 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளோம். அடுத்த 5 நாட்களுக்கு கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகள் அனைத்தையும் நிறுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் புழுதி பறப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சாலைகளில் இன்று முதல் தண்ணீர் தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிலக்கரி எரிப்பதால் வெளியாகும் மாசு, டெல்லியை தாக்குகிறது என ஏற்கனவே குற்றச்சாட்டு நிலவுகிறது. எனவே பதன்பூர் அனல்மின்நிலையத்திலும் 10 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் நீடிக்கும் புகைமூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News