போலீசார் போக்குவரத்து விதிகளை மீறினால் இருமடங்கு அபராதம்: கமிஷனர் ஆணை

ஒரு போலீஸ்காரர் கடமையில் இருக்கும்போதோ அல்லது அவரது சொந்த வாகனத்தில் செல்லும்போதோ போக்குவரத்து விதிகளை மீறினால், அவர்கள் இரண்டு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2019, 01:40 PM IST
போலீசார் போக்குவரத்து விதிகளை மீறினால் இருமடங்கு அபராதம்: கமிஷனர் ஆணை title=

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் இறப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறது. பல சட்டங்களையும் இயற்றி உள்ளது. ஆனாலும் இறப்பு எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை. இதனால் ஏற்கனவே இருந்த மோட்டார் வாகனச் சட்டத்தில் சில திருந்தங்களை செய்து 2019 புதிய மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர் 1 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய சட்டத்தில் அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2019 புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டத்தில் இருந்து அபாரதம் குறித்த செய்திகள் ஊடகத்தின் தலைப்புச் செய்திகளாக இடம் பெற்றுள்ளன. அதாவது ஸ்கூட்டிக்கு 23 ஆயிரம் அபாரதம், 26 ஆயிரத்துக்கு வாங்கிய ஆட்டோவுக்கு 46 ஆயிரம் ரூபாய் அபாரதம் போன்ற செய்திகள் அதிக கவனம் பெற்றுள்ளன.

இந்தநிலையில், டெல்லி போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் மீனு சவுத்ரி ஒரு பெரிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் அளித்த உத்தரவின்படி, ஒரு போலீஸ்காரர் கடமையில் இருக்கும்போதோ அல்லது அவரது சொந்த வாகனத்தில் செல்லும்போதோ போக்குவரத்து விதிகளை மீறினால், அவர்கள் இரண்டு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் நகல் டெல்லி காவல்துறையின் ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

 

காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை மீறுவதாக ஆதாரத்துடன் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் சாதாரண மக்களுக்கு மட்டுமே ஒரு விதி. காவல்துறையினருக்கு ஒரு விதியா என கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில் டெல்லி போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனரின் உத்தரவு மிகவும் கவனம் பெற்றுள்ளது.

Trending News