7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் ஹாக்கி இந்தியா லீக்! என்ன ஸ்பெஷல்?

தமிழக விளையாட்டிலும் வேலை செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டு பிரிமியர் லீக் நடத்தும் திட்டமும் உள்ளது. சட்டரீதியாக ஆய்வு செய்து வருகிறோம் என்று தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் உரிமையாளர் ஜோஸ் சார்ஜ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Dec 18, 2024, 06:42 PM IST
  • 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கி இந்தியா லீக்.
  • டிச. 28 தொடங்கி பிப். 1 வரை போட்டிகள் நடைபெற உள்ளது.
  • ஆண்கள் லீகில் 8 அணிகளும், பெண்கள் லீகில் 6 அணிகளும் விளையாடவுள்ளன.
7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் ஹாக்கி இந்தியா லீக்! என்ன ஸ்பெஷல்? title=

ஹாக்கி இந்தியா லீகில் விளையாட உள்ள தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் அறிமுக விழா தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய ஹாக்கி அமைப்பின் பொருளாளர் சேகர் மனோகரன், தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் உரிமையாளர் ஜோஸ் சால்ஸ் மார்ட்டின், மற்றும் அந்த அணியின் பயிற்சியாளர்கள் வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அணியின் இலட்சணையும், அணிக்கான ஜெர்சியும் வெளியிடப்பட்டது. 2015 முதல் 2017 வரை ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடைபெற்றது. அதற்குப் பிறகு அந்தத் தொடர் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்குகிறது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற லீக் தொடரில் ஆண்களுக்கான அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் 8 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் பங்கேற்கிறது. ஆண்கள் அணிகளை பொறுத்த வரை சென்னை, லக்னோ, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, ஒடிசா, ஹைதராபாத், ராஞ்சி ஆகிய எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. HIL 2024-25 டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கும், தொடக்க விழா ரூர்கேலாவில் நடைபெற உள்ளது. HIL 2024-25 போட்டிகள் ராஞ்சியில் உள்ள மரங் கோம்கே ஜெய்பால் சிங் ஆஸ்ட்ரோடர்ஃப் ஹாக்கி ஸ்டேடியம், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | ரோகித் சர்மா இடத்துக்கு மிகப்பெரிய ஆபத்து... தப்பிக்க ஒரே ஆப்சன்..!

தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் அறிமுக நிகழ்வில் தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவரும், ஹாக்கி இந்தியா பொருளாளருமான சேகர் மனோகரன் பேசியதாவது, முதலில் ஹாக்கி லீக் தான் தொடங்கியது. பிறகு தான் ஐபிஎல், ப்ரோ கபடி போன்றவை வந்தது. ஆனால் ஏழு வருடங்கள் இடைவெளி ஏற்பட்டு விட்டது. தற்போது மீண்டும் வந்த போது தமிழக அணியை எடுக்க யாரும் முன்வரவில்லை என்று கஷ்டமாக இருந்தது. அந்த நேரத்தில் தான் சால்ஸ் முன்வந்து ஏலத்தில் எடுக்க சம்மதம் தெரிவித்தார். ஹாக்கில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்றுள்ளோம். அது மட்டுமல்லாமல் இந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு தங்கங்களை வென்றுள்ளோம்.

உலகில் எல்லா இடங்களிலும் திரும்பிப் பார்க்க கூடிய இடத்தில் ஹாக்கி பிரம்மாண்டமாக இருக்கிறது. 170 வெளிநாட்டு வீரர்கள், 600 இந்திய வீரர்கள் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள பதிவு செய்தார்கள். ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை விட இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டர்கள். இது நமக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம். தமிழ்நாடு டிராகன்ஸ் அணியில் தமிழக வீரர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆறு தமிழக வீரர்கள் உள்ளார்கள், இது அவர்களுக்கு கிடைக்கக் கூடிய மிகச் சிறப்பான வாய்ப்பு. தமிழகத்தைச் சேர்ந்த சார்ஸ் டிக்கன்ஸ் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த அணியை உருவாக்கியுள்ளோம். இது ஒரு அணியாக மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒரு அகாடமி போன்று இது செயல்பட வேண்டும்.

hockey

தமிழகத்திலிருந்து நிறைய வீரர்களை உருவாக்க அடிமட்ட அளவில் இருந்து தகுதியுள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களை தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு தேர்வு செய்ய சால்ஸ் குழுமம் உதவ வேண்டும். தொடர்ந்து அவர்களின் தமிழ்நாடு அணியில் கொண்டு வர வேண்டும் இந்திய அணிக்கான முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும், தொடர்ந்து அவர்கள் ஒலிம்பிக்கிற்கு செல்ல வேண்டும். இதுபோன்று லீக் என்பதை தாண்டி செயல்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார் சேகர் மனோகரன். அடுத்த ஒலிம்பிக் செல்லும் அணியில் இந்த அணியில் இருந்து செல்லக் கூடியவர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஹாக்கி இந்தியா லீக்கில் ஆடுகிற அணிகளில் சிறந்த அணியாக இது உள்ளது. அடுத்து நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து வீரர்கள் வருவார்கள்.

நாம் தற்போது நியமித்திருக்கக்கூடிய பயிற்சியாளர் மிகச் சிறந்தவர். தங்கம் வென்ற ஜெர்மனியின் ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டவர். அணிக்கான உதவியாளர்களை தேடி தேடி தேர்வு செய்துள்ளோம். பயிற்சியாளர்களுக்கு முதலில் பயிற்சி அளித்த பிறகு, பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருக்கிறோம். ஒலிம்பிக் வென்ற அணியில் இருந்தவர்கள் உட்பட மிகச்சிறந்த வீரர்களை அணிக்கு தேர்வு செய்துள்ளோம். கண்டிப்பாக இந்த அணி கோப்பையை வெல்லும் என்றார்.

தமிழ்நாடு டிராகன் சனியின் உரிமையாளர் ஜோஸ் சால்ஸ் மார்ட்டின் பேசிய போது, தமிழ் தலைவாஸ் அணியை வாங்க நினைத்தோம், முடியாமல் போனது. ஏதாவது ஒரு தமிழ்நாடு அணியை வாங்க வேண்டும் என்று நினைத்தோம். ஹாக்கி நமது தேசிய விளையாட்டு. 1928 ஆம் ஆண்டு ஹாக்கியில் இந்தியா உலகக்கோப்பையை வென்றது. இந்த முறை அடிமட்ட அளவில் இருந்து விளையாட்டை வளர்த்து, தமிழக ஹாக்கி வீரர்களை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வைப்பதும், இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்வதும் தான் இலக்காக உள்ளதாகக் கூறினார். ஹாக்கி நமது தேசிய விளையாட்டு, அதுமட்டுமல்லாமல் ஐபிஎல்க்கு முன்பாகவே ஹாக்கில் இதுதான் தொடங்கியது, சில காரணங்களால் தடைபட்டது. மீண்டும் இதை தொடங்குவது எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. தமிழக விளையாட்டிலும் வேலை செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டு பிரிமியர் லீக் நடத்தும் திட்டமும் உள்ளது. சட்டரீதியாக ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

தமிழ்நாடு டிராகன்ஸ் கார்த்திக் செல்வம் பேசிய போது,  ஏழு வருடத்திற்கு பிறகு இந்த லீக் போட்டிகள் நடைபெறுவது மிகவும் முக்கியமானது. அடுத்து வரக்கூடிய ஒலிம்பிக் போட்டிகளுக்கு இதில் இருந்து வீரர்களை தேர்வு செய்வார்கள். நன்றாக செயல்பட்டால் இந்திய அணிக்குச் செயல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் படிக்க | ஓய்வு பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்... திடீர் அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News