எம்.பி.,க்கள் விவாதத்தில் ஈடுபட மட்டுமே உரிமை உண்டு. அமளியில் ஈடுபட உரிமையில்லை என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதைக்குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:- பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. அவர்களுக்கு விவாதம் நடத்த உரிமை உள்ளது. இடையூறு செய்வதற்கு உரிமை இல்லை. போராட்டத்திற்கான களம் பார்லிமென்ட் அல்ல எனவும், பார்லிமென்டில் தர்ணா நடத்த தலைவர்கள் தேர்வு செய்யப்படவில்லை எனவும் கூறினார். அவையில் விவாதம் நடத்த வேண்டும். அப்படி நடக்க வில்லை என்றால் பார்லிமென்ட் நடவடிக்கைகள் சிறப்பானதாக இருக்காது. இடையூறு செய்வது பெரும்பான்மையான மக்கள் முடிவுக்கு எதிராக உள்ளது.
கடவுள் அருளுடன் எம்பி.,க்கள் உங்கள் பணியை செய்ய வேண்டும். பார்லிமென்டில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை முற்றிலும் ஏற்க முடியாது. மேலும் தனி தனியாக தேர்தல் நடத்துவது பண செலவு அதிகமாக ஏற்படுகிறது. எனவே லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வழியை காண வேண்டும் எனவும் கூறினார்.