பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திகார் சிறைக்கு அனுப்பியது.
அவர் 14 நாட்கள் (அக்டோபர் 1) வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது உடல்நிலை காரணமாக, அவரை முதலில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது, சிவகுமார் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தும் பட்சத்தில், அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், இல்லையென்றால் அவரை விடுவித்து திகார் சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் சிவகுமார் சார்பில் ஆஜராகி ஜாமீனுக்காக வாதிட்டனர்.
முன்னதாக கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான இடங்கில் நடத்திய சோதனையில் ரூ.8.50 கோடி சிக்கிய வழக்கினை அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. முன்ஜாமீன் கோரி மனுவும் தள்ளுபடி ஆனதால், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் முன்நிறுத்தப்பட்டார்.
4 நாட்கள் விசாரணைக்கு பின்னர் சிவக்குமார் கைது செய்யப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைப்பெற்ற விசாரணையில் சிவக்குமாரின் நீதிமன்ற காவலை 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிவக்குமார் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.