எனக்குப் புரியும் மொழியில் பேசமுடியுமா? -கனிமொழி Video!

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

Last Updated : Jan 10, 2019, 04:48 PM IST
எனக்குப் புரியும் மொழியில் பேசமுடியுமா? -கனிமொழி Video! title=

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா மத்திய அமைசரவையில் ஒப்புதல் பெற்றது. பின்னர் நேற்று நாடாளுமன்ற மக்களவையிலும் ஒப்புதல் பெற்றது. 

முன்னதாக மாநிலங்களவையில் இம்மசோதா தொடர்பான விவாதம் நேற்று நடந்தது. அப்போது தனது வாதத்தை முன்வைத்த திமுக எம்.பி. கனிமொழி, ''10% இட ஒதுக்கீடை அளிக்க மத்திய அரசு எதனால் முடிவெடுத்தது? எனக்குப் புரியவில்லை. அவசர சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கான கட்டாயம் என்ன, மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தான் மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தினை கொண்டுவந்துள்ளது.

அரசியல் சட்டத் திருத்த மசோதாவான இட ஒதுக்கீடு மசோதாவை, தேர்வுக்குழுவுக்கோ, நிலைக்குழுவுக்கோ அனுப்பப்படாமல் நிறைவேற்ற முயல்வது முறையா?

நான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன். ஏனெனில் நான் பெரியார் மண்ணை சேர்ந்தவள், எங்கள் மண்ணுக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதியை அளித்த வரலாறு உண்டு. பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது கருணை அடிப்படையில் அல்ல, அது அவர்களின் உரிமை. 

நாட்டில் பொருளாதார ரீதியில் நிகழும் புறக்கணிப்புகளை விட, சாதிய ரீதியிலான புறக்கணிப்புகள் அதிகமாக உள்ளன. நம் நாட்டில் உள்ள ஒரு சாபக்கேடு, சாதியை புறம்தள்ள ஒருவர் மதத்தினை மாற்றிக்கொண்டாலும் அவரை விடாமல் சாதி அடையாளம் பின்தொடரும் என்பது தான்" என குறிப்பிட்டார்.

இதுகுறித்து மேலும் பேசிய கனிமொழியிடம், நேரம் முடிந்துவிட்டதா துணை சபாநாயகர், விரைவில் உரையை முடிக்குமாறு இந்தியில் கூறினார். அதற்கு கனிமொழி, "எனக்குப் புரிகின்ற மொழியில் பேசமுடியுமா?" என்று கேட்க, பின்னர் துணை சபாநாயகர் ஆங்கிலத்தில் பேசினார்.

இச்சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News