போபால்: போபால் மத்திய சிறைச்சாலையில் போலீசாரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சிமி இயக்க 8 பயங்கரவாதிகள் காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட விடியோ காட்சியில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் ஆகியவை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரும், காவல்துறை ஐ.ஜியும் தெரிவித்துள்ளனர்.
போபால் மத்திய சிறைச்சாலையில் சிமி இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அம்ஜத், ஜாகிர் ஹுசேன் சாதிக், முகமது சாலிக், முஜீப் ஷேக், மெஹ்பூத் குட்டு, முகமது காலித் அஹமது, அகில், மஜித் ஆகிய 8 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் 8 பேரும் திங்கள்கிழமை அதிகாலை சிறைக் காவலரைத் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
சிமி பயங்கரவாதிகள் 8 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களைப் பற்றிய தகவலை தெரிவிப்போருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு அறிவித்தது. இந்நிலையில், போபால் அருகே உள்ள மலிகடாவில் சிமி பயங்கரவாதிகள் 8 பேரும் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மலிகடாவுக்கு விரைந்து சென்று, பயங்கரவாதிகள் 8 பேரையும் போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது சிமி பயங்கரவாதிகள் 8 பேரும் போலீஸாரிடம் சரணடையாமல் துப்பாக்கியால் சுட்டதாகவும், பதிலுக்கு போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேரும் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.