லாரா திரைப்படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம் இதோ!

Lara Movie Review: மணி மூர்த்தி இயக்கத்தில் கார்த்திகேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள லாரா படம் நாளை ஜனவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jan 2, 2025, 04:11 PM IST
  • நாளை வெளியாகும் லாரா படம்.
  • அசோக் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • கிரைம் திரில்லர் வடிவில் படம் உருவாகி உள்ளது.
லாரா திரைப்படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம் இதோ! title=

லாரா படத்தில் அசோக் குமார், கார்த்திகேசன், அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, பாலா, எஸ். கே. பாபு, திலீப்குமார், இ.எஸ். பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர். மணி மூர்த்தி இந்த படத்தை இயக்கி உள்ளார். ஆர் ஜே ரவீன் ஒளிப்பதிவு செய்ய, ரகு ஸ்ரவன் இசையமைத்துள்ளார், கார்த்திகேசன் லாரா படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் கதை

லாரன்ஸ் என்பவர் தனது மனைவி ஸ்டெல்லாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறார். இந்நிலையில் காரைக்கால் பகுதியில் உள்ள நிரவி காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் வருகிறது. ஒரு பெண்ணின் உடல் கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கிறது. அந்த பெண்ணின் உடல் முகம் தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளது. யார் என்று அடையாளம் காண முடியாத அளவிற்கு முகம் சிதைவுற்று, உடலில் சில பாகங்கள் சேமடைந்த நிலையில் இருக்கிறது. இதையடுத்து லாரன்ஸிடம் இது உன் மனைவியா என்று அடையாளம் காட்ட சொல்லி காவல்துறையினர் அழைத்து செல்கின்றனர். ஆனால் அது என் மனைவி இல்லை என்று லாரன்ஸ் தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம்! ஹீரோ யார் தெரியுமா?

இந்நிலையில் தன் மனைவியை தானே கொலை செய்துவிட்டு லாரன்ஸ் நாடகம் ஆடுகிறான் என்று தொலைபேசி வாயிலாக காவல் நிலையத்திற்கு தகவல் வருகிறது. இதனால் லாரன்ஸைச் சந்தேகித்த போலீஸ் அவனது நடவடிக்கைகளைக் தொடர்ந்து கண்காணிக்கிறது. அப்போது லாரன்ஸ் எதையோ மறைகிறார் என்றும், அவனுக்குள் ஏதோ ரகசியம் ஒளிந்து இருப்பதாக காவல்துறையினர் சந்தேகம் அடைகின்றனர். ஆனாலும் சரியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விசாரணையை வெவ்வேறு திசைகளுக்கு கூட்டி செல்கிறது.

அப்படி போகும் வழியில் தோண்டத் தோண்ட மர்மங்களும் நிகழ்கின்றன. ஹவாலா பணம் மோசடி, பாலியல் தொழில் செய்யும் பெண்கள், அவர்களைக் கொடுமைப்படுத்தப்படும் மர்ம மனிதர்கள், லாராவின் காதல் கதை, ஆதரவற்றோர் இல்லம், ஆயுதங்கள் தயாரிப்பு என்று கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. பரபரப்பாக படம் போய்க் கொண்டிருக்கும் போது லாராவின் காதல் கதை அத்தியாயம் விரிகிறது. ஒரு கட்டத்தில் போலீஸின் அத்தனை சந்தேகங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு வேறொரு திருப்பம் நிகழ்கிறது. அந்தக் காதல் கதைக்கும் இந்த கொலை கதைக்கும் என்ன தொடர்பு? உண்மையில் லாரன்ஸ் மனைவிக்கு என்ன ஆனது என்பதே லாரா படத்தின் கதை.

வளர்ந்து வரும் நாயக நடிகர் அசோக் குமார் தனக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். குறைந்த காட்சிகளே இருந்தாலும், நன்றாக நடித்துள்ளார். போலீசார் விசாரணை செய்யும் காட்சிகள் நீளமாக இருந்தாலும் சலிப்பூட்டாமல் உள்ளது. லாராவாக அனுஷ்ரேயா ராஜன் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். மேலும் பாலா, எஸ் கே பாபு, திலீப்குமார், இ.எஸ். பிரதீப்  ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஆர் ஜே ரவீன் ஒளிப்பதிவு, ரகு ஸ்ரவண் குமார் இசை ஒரு க்ரைம் திரில்லருக்குத் தேவையான படத்திற்கு உதவி உள்ளது. நகைச்சுவைக் காட்சிகள் என்று தனியாக எதுவும் இல்லை என்றாலும் அந்தந்த காட்சிகளில் நடக்கும் விஷயங்கள் சிரிப்பை ஏற்படுத்துகிறது.

படத்தில் வரும் பாடல்கள் பெரிதாக ரசிக்க வைக்கவில்லை என்றாலும், பின்னணி இசை குறை சொல்ல ஒன்றும் இல்லாமல் நிறைவைத் தருகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கதை நடந்தாலும் காட்சிகளில் சோர்வு வெளிப்படாமல் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கும் லாரா நிச்சயம் பிடிக்கலாம்.

மேலும் படிக்க | ரஜினியுடன் அண்ணாத்தே படத்தில் நடித்ததற்கு வருத்தம் அடைந்தேன் - குஷ்பூ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News