மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாகவே 5 பேர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 1-ம் தேதி விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து வழங்கக் கோரி மத்தியப் பிரதேச விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்திருந்தார். இருப்பினும், அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்து வந்தது.
இந்நிலையில், மன்த்செளர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதில் 5 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிலர் காயமடைந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, வன்முறை நிகழ்ந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.கே.சிங் பிறப்பித்தார். இதனிடையே, வன்முறையில் 5 விவசாயிகள் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது, அதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று தெரிவித்த அவர், அதுதொடர்பான உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் உதவி தொகை வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறித்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக நிதிஉதவி அதிகரிக்கப்பட்டு உள்ளது. அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் எனவும், அவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் எனவும் சிவராஜ் சிங் சவுகான் கூறிஉள்ளார்.