Economic Survey 2024: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 22) தொடங்க உள்ளது. வரும் ஆக. 12ஆம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 2024-2025ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட் (Union Budget 2024) நாடாளுமன்றத்தில் நாளை (ஜூலை 23) தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு கடந்த பிப். 1ஆம் தேதி அன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த பின்னர் தற்போது முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) 7ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். கடந்த சில ஆண்டுகளை போல் இந்த பட்ஜெட்டும் காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கூடவே, ஜூலை 23ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட்டும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்மலா சீதாராமனின் 'சாதனை' பட்ஜெட்
2019ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாரமன் தொடர்ச்சியாக 7ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம், மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடிக்கிறார். மொரார்ஜி தேசாய் 1959ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிர்மலா சீதாரமானும் ஐந்து முழு பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட் என 6 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். இருப்பினும், அதிக முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற சாதனையை மொரார்ஜி தேசாய் வைத்துள்ளார். அவர் 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
மேலும் படிக்க | Budget 2024: நிபுணர்கள் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள்... முழு பட்டியல் இதோ
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
அதற்கு முன்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை (Economic Survey) இன்று (ஜூலை 22) சமர்பிக்கிறார். பலருக்கும் பட்ஜெட் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும், ஆனால் இந்த பொருளாதார ஆய்வறிக்கை குறித்து பெரிய புரிதல் இருக்காது. இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ள பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன, பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் ஏன் அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது, இதன் முக்கியத்துவம் என்ன, என்பது குறித்து இதில் காணலாம்.
பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?
இந்த பொருளாதார ஆய்வறிக்கை என்பது நிதி அமைச்சகத்தின் பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இந்த பொருளாதார ஆய்வறிக்கை என்பது கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் விரிவான மதிப்பாய்வு ஆகும். அதாவது கடந்த ஆண்டில் பொருளாதாரத்தில் என்னென்ன மாறுதல்கள், வளர்ச்சிகள் நடந்துள்ளன என்பதை இது சுட்டிக்காட்டும்.
தொடக்க கட்டத்தில், அதாவது 1950-51 நிதியாண்டில் பட்ஜெட் ஆவணங்களின் ஒரு பகுதியாக இந்த பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்பின், 1960 காலகட்டங்களில் இது பட்ஜெட் நடைமுறைகளில் இருந்து பிரிக்கப்பட்டு, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்டுகிறது.
ஒவ்வொரு பொருளாதார ஆய்வறிக்கைக்கும் ஒரு கருப்பொருள் இருக்கும். கடந்த 2022-23 நிதியாண்டில் கொரோனா தொற்றுக்கு இந்தியாவின் பொருளாதார எதிர்வினையில் கவனம் செலுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது, எனவே அதற்கு Agile Approach (பொருளாதாரத்தில் சுறுசுறுப்பான அணுகுமுறை) என பெயரிடப்பட்டது. 2023-24 நிதியாண்டில் ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் கொரோனா தொற்று பாதிப்புக்கு பிந்தைய சூழல் ஆகியவற்றில் இருந்து பொருளாதாரம் மீட்டெடுத்தை குறிக்கும் விதமாக 'Recovery Complete' என பெயரிடப்பட்டது.
வேகமாக வளரும் இந்தியா
எனவே, இந்தாண்டுக்கான கருப்பொருள் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் இருக்கிறது. மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த பின் கொள்கை ரீதியிலான பெரும் அறிவிப்பை இன்று அவர்கள் அறிவிப்பார்கள் என தெரிகிறது. மேலும் சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 7.2% ஆக இருக்கும் என கணித்திருக்கிறது, முன்னதாக 7% என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது உயர்ந்துள்ளது.
சமீப ஆண்டுகளாக உள்நாட்டு தேவை என்பது வலுபெற்றிருப்பதால், பொருளாதாரத்தை 7 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்திற்கு உந்துயுள்ளது. மேலும், 2024ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக சர்வதேச நாணய நிதியம் உயர்த்தியுள்ளது. அதாவது இதன்மூலம் வளர்ந்து வரும் சந்தைகள், பொருளாதாரத்தில் வளரும் நாடுகள் ஆகியவற்றில் இந்தியா மிக வேகமாக வளரும் நாடாக அது குறிக்கிறது. 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபியுடன் அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கலாம் என கணிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டுகளில் 7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டும் என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ