முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை தனது 84வது வயதில் காலமானார்.
பிரணாப் முகர்ஜியின் இந்தியா அரசியலின் மிக முக்கிய, பெருமைமிக்க தலைவர்களின் ஒருவர்.
மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள மிராட்டி என்ற கிராமத்தில் டிசம்பர் 11, 1935 இல் பிறந்த முகர்ஜி, அரசியல் அறிவியல் மற்றும் வரலாறு பாடத்தில் முதுகலை பட்டத்தையும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்ட படிப்பையும் முடித்தார்.
ஜூலை 25, 2012 முதல் 2017 வரை நாட்டின் 13 வது குடியரசுத் தலைவராக பணியாற்றிய பிரணாப் முகர்ஜி, நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான ‘பாரத் ரத்னா’ விருதை பெற்றவர், ஆகஸ்ட் 31, 2020 அன்று காலமானார்.
முகர்ஜியின் நீண்ட அரசியல் வாழ்க்கை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு நீடித்தது, அவர் காங்கிரஸ் கட்சியிலும், முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கங்களிலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தார்.
பிரணாப் முகர்ஜியின் மரணம் காங்கிரஸில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்திரா காந்தியுடன் நெருக்கமாக பணியாற்றிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். இவரது மறைவுக்கு பிறகு இந்திராகாந்திக்கு நெருக்கமாக இருந்த தலைவர்கள் இப்போது உயிருடன் யாரும் இல்லை எனக் கூறலாம்.
முகர்ஜியின் அரசியல் பயணம் மேற்கு வங்கத்தில் தொடங்கியது. மிட்னாபூர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற வி.கே.கிருஷ்ணா மேனனின் தேர்தல் முகவராக பணியாற்றியதன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது.
இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பாங்களா காங்கிரஸ் உறுப்பினராக இருந்த பிரணாப் முகர்ஜியை, மாநிலங்களவை உறுப்பினராக்கினார். பின்னர் பாங்களா காங்கிரஸ் 1970 இல் காங்கிரஸுடன் இணைந்தது.
முகர்ஜி 1973 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அமைச்சரவையில், அமைச்சர் பதவி கிடைத்தது. முதலில் தொழில்துறை மேம்பாட்டு துறையின் இளைய அமைச்சராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குள், அவர் வருவாய் மற்றும் வங்கித் துறையில் தனிப்பட்ட பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சராக உயர்ந்தார். பம்பாய் கடத்தல் நிழல் உலக டான் ஹாஜி மஸ்தான் மீது நடவடிக்கை எடுத்ததில் அவர் பெரிதும் பேசப்பட்டார்.
கூர்மையான நினைவாற்றல், சிந்தனையில் தெளிவு மற்றும் சிக்கல்களைப் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றால் பெயர் பெற்ற இவர், வெளியுறவு, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் நிதிஅமைச்சராக சிறப்பாக பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
2004 முதல் 2012 வரை யுபிஏ அரசாங்கங்களில் அமைச்சராக இருந்தபோது, நிர்வாக சீர்திருத்தங்கள், தகவல் அறியும் உரிமை , வேலைவாய்ப்பு உரிமை, உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு, போன்ற பல்வேறு விஷயங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் முகர்ஜி முக்கிய பங்கு வகித்தார்.
எழுபது மற்றும் எண்பதாம் ஆண்டுகளில், பிராந்திய கிராமப்புற வங்கிகள் (1975) மற்றும் எக்ஸிம் வங்கி மற்றும் இந்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (1981-82) ஆகியவற்றை நிறுவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
அவர் தனது ஓய்வு நேரத்தில் புத்தகம் படித்தல், தோட்டக்கலை ஆகியவற்றில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டினார். இசையை நேசித்தார். கலை மற்றும் கலாச்சாரத்தை நேசிக்கும் அற்புதமான மனிதாராக இருந்தார்.