மழை வர வேண்டி கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள உடுப்பி குடியிருப்போர் அமைப்பு சார்பில் தவளைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது!
கர்நாடக மாநிலம் உடுப்பியில் மழை பெய்ய வருண பகவானை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வை ஜில்லா நகரிக் சமிதி மற்றும் பஞ்சரத்ன சேவா டிரஸ்ட் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
கிடியூர் ஹோட்டலில் பார்க்கிங் செய்யும் இடத்தில் வைத்து தவளைத் திருமணம் நடந்துள்ளது. தவளைகள் மணப்பெண் மற்றும் மணமகன் போல அலங்கரிக்கப்பட்டன. மணமகனான தவளைக்கு வருண் என்றும் மணமகளான தவளைக்கு வர்ஷா என்றும் பெயர் வைத்துள்ளனர்.
ஆண் தவளைக்கும் பெண் தவளைக்கும் புத்தாடை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டன. இரண்டு தவளைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறு திருமணம் செய்வித்தால் மழை பெய்யும் என்ற பழைய நம்பிக்கையின் அடிப்படையில் தவளைக் கல்யாணம் நடைபெற்றது. தவளைகள் திருமணம் நடப்பதை அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
இந்த வினோதமான நிகழ்வை ANI செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
#WATCH Frogs married in Karnataka's Udupi to please the rain gods. The frogs were dressed in custom made outfits for the ceremony. pic.twitter.com/s9I4rLT0Tu
— ANI (@ANI) June 8, 2019