பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஹரியானாவில் ‘பூரா சச்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர் ராம்சந்தர் சத்ரபதி. கடந்த 2002ம் அண்டு இவர் தனது பத்திரிகையில், குர்மீத் ராம் ரஹிம் சிங் நடத்திவரும் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தில் பெண்கள் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது குறித்து ஒரு கடிதத்தை வெளியிட்டார்.
அதன்பின்னர் அக்டோபர் 24-ம் தேதி சத்ரபதியை அவரது வீட்டின் அருகே குர்தீப் சிங், நிர்மல் சிங் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் அடைந்த சத்ரபதி பின்னர் இறந்தார். இதுதொடர்பாக குல்தீப்சிங், நிர்மல் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆசிரம தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கையும் குற்றவாளியாக சேர்த்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீப்சிங், குர்மீத் ராம் ரஹிம் சிங், குல்தீப்சிங், நிர்மல்சிங், கிரிஷன்லால் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தார் அத்துடன் தண்டனை விவரம் வருகிற 17-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
அதன்படி சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும், அவர்கள் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.