Haryana Assembly Election Result 2024: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்பதுதான் அரசியல் வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என கணித்தன. அதுமட்டுமின்றி ஒருபடி மேலே போய் காங்கிரஸ் கட்சி சார்பில் யார் முதல்வராக பொறுப்பேற்பார்கள் என்றெல்லாம் பேச்சுகள் வர தொடங்கின. அதிலும் பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோருக்கு முதல்வர் ஆகும் ரேஸில் கடும் போட்டி எனவும் கூறப்பட்டது.
இதைதான் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு வெளிவந்த முதல்கட்ட முடிவுகளும் தெரிவித்தன. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த நிலை ஹரியானாவில் தலைகீழாக மாறியது எனலாம். பாஜக தற்போது சுமார் 50 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 35+ தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது. அதிலும் 50 தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சுலபமாக பெற வேண்டிய வெற்றியை காங்கிரஸ் எப்படி தவறவிட்டது, 10 ஆண்டுகளாக பாஜக அங்கு ஆட்சி செய்து வரும் நிலையில், ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிகமாக இருந்தபோதும் இந்த முன்னிலையை அக்கட்சி எப்படி பெற்றது என்றும் கேள்விகள் எழுகின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு இருந்த சாதகங்கள்?
ஆட்சிக்கு எதிரான மனநிலை ஒருபுறம் இருக்க, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகளால் ஜாட் சமூகத்தினர் பாஜக மீது கடும் அதிருப்தியாக இருந்ததாக கூறப்படுகிறது. ஜாட் சமூக மக்களின் வாக்குகள் பெரும்பாலும் காங்கிரஸ் பக்கம் சாயும் எனவும் கணிக்கப்பட்டது. அதேபோல், விவசாயிகள் பிரச்னை, மல்யுத்த வீராங்கனைகள் பிரச்னை என காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான மனநிலையே அதிகம் இருந்தது. அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையையும் மக்களை கவரும் வகையில் வடிவமைத்திருந்தது. காங்கிரஸின் பெண்கள் உரிமைத்தொகை அறிவிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
வெற்றிக்கு காரணமான அஹிர்வால் பெல்ட்
அந்த வகையில், தற்போது காங்கிரஸ் இத்தகைய வித்தியாசத்தில் முன்னிலையுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க அவர்களுக்கு பலமிக்க சில தொகுதிகளே காரணம் என தெரிகிறது. ஹரியானாவின் தெற்கு பகுதியில் உள்ள அஹிர்வால் பெல்ட் பகுதிதான் பாஜகவுக்கு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கின்றன. இந்த பகுதியில்தான் குருகிராம், ரெவாரி, மகேந்தர்கர்க் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன. இவை அனைத்தும் 2014ஆம் ஆண்டில் இருந்து பாஜகவின் கோட்டையாக உள்ளது. இவை அனைத்திலும் காங்கிரஸ் பின்னடைவில் உள்ளன.
பாஜகவின் கோட்டை
இந்த அஹிர்வால் பெல்ட்டில் மொத்தம் 4 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த 4 மக்களவை தொகுதிகளில் 28 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 28 தொகுதிகளில் 60 சதவீத வாக்குகள் நகரப்புற பகுதி மக்களின் வாக்குகள்தான். இந்த 28 தொகுதிகளில் பாஜக கடந்த 2014இல் 15 தொகுதிகளையும், 2019இல் 16 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. அதுவும் கடந்த முறை பாஜக வெற்றிபெற்றதே 40 தொகுதிகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக இங்கு ஜாட் அல்லாத மக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்திலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வாக்குகளையும் பெருவாரியாக பெற்றதன் மூலம் ஹரியானாவில் ஆட்சியை தக்கவைத்திருக்கிறது, பாஜக. தற்போதைய தோல்விக்கு காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலும் ஒரு காரணம் எனலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ