கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காஷ்மீர் மாநிலம் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்க்கு தக்க பதிலடி தரவேண்டும் என அனைவரும் விரும்பினர். எனவே பயங்கரவாதிகள் மீது "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" நடத்த இந்திய அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியது. இதனையடுத்து தாக்குதல் நடத்துவதற்க்காக எல்லைக் கோட்டில் ராணுவ வீரர்களுடன் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் இரண்டு நாட்களாக தாக்குதல் எப்படி நடத்துவது குறித்து ஆலோசனை செய்தனர்.
அதே மாதத்தில் 28 மற்றும் 29-ம் தேதிகளில் இந்திய ராணுவத்தினர், எல்லைக் கோட்டில் (LOC) இருந்து, சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை ஹெலிகாப்டர்கள் மூலம் சென்று, பயங்கரவாதிகளின் கூடாரங்கள் மீது "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் நள்ளிரவு தொடங்கி அதிகாலை 6.15 மணி வரை நடைபெற்றது. இதில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஏழு பயங்கரவாத கூடாரங்கள் அழிக்கப்பட்டன. இந்த ஆஃப்ரேசனில் இந்திய வீரர்களுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை.
"சர்ஜிக்கல் ஸ்டிரைக்" நடத்திய இந்திய வீரர்கள் தங்கள் தலையில் அணிந்திருந்த தொப்பியில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததால், தாக்குதல் அனைத்தும் பதிவாகியுள்ளது. மேலும் ராணுவத் தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலையாக "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" தாக்குதலை பார்வையிட்டனர்.
வீடியோ:-
இந்த "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" உலக அளவில் பேசப்பட்டது. ஆனால் சில அரசியல் கட்சி மற்றும் தலைவர்கள், "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" நடக்கவே இல்லை என்றும், பாஜக மக்களை ஏமாற்றுகிறது எனவும் கூறினார்கள். அதேபோல பாகிஸ்தானும் "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" நடைபெற வில்லை எனக் கூறியது. இச்சம்பவம் விவாதத்திற்கு உள்ளாகின. உண்மையாகா "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" நடைபெற்றது என்றால் வீடியோ வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. நாட்டின் தேசிய நலன் கருதி தற்போது வீடியோ வெளியிட முடியாது என மத்திய அரசு கூறியது.
தற்போது "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" நடைபெற்றது உண்மை தான் என்று நிருப்பிக்க இரண்டு வருடங்களுக்கு பிறகு (சுமார் 636 நாட்கள்) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்தியா வீரர்கள் பயங்கரவாதிகள் மீதும், அவர்களது கூடாரங்கள் மீதும் தாக்குதல் நடத்துவது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" தாக்குதலில் பங்கேற்ற இராணுவ உயரதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.