அருண் ஜெட்லிக்கு பதிலாக இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யும் பியுஷ் கோயல்

பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பதிலாக ரயில்வே துறை அமைச்சராக உள்ள பியுஷ் கோயல் தாக்கல் செய்வார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2019, 07:42 PM IST
அருண் ஜெட்லிக்கு பதிலாக இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யும் பியுஷ் கோயல் title=

இந்த ஆண்டு மத்தியில் மக்களவை தேர்தல் வர உள்ளதால், இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்கிறது மத்திய அரசு. இன்னும் மூன்றே மாதங்களே மோடி அரசு செயல்படும். எனவே மோடி அரசின் கடைசி பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்பே தெரிவித்திருந்தார். 

மக்களவை தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் பெரும்பாலும் முக்கிய அறிவிப்பு மற்றும் சலுகைகள் இருக்காது. இதனால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கம் போல இடைக்காலப் பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்படும் எனவும், முழு பட்ஜெட் தாக்கல் இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாளை மறுநாள் இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பதிலாக ரயில்வே துறை அமைச்சராக உள்ள பியுஷ் கோயல் தாக்கல் செய்வார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் இடைக்கால நிதி அமைச்சராக பியுஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தநிலையில், பியுஷ் கோயல் பொதுத்துறை வங்கி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு, பொதுத்துறை வங்கிகளில் சில இந்த ஆண்டு லாபம் ஈட்டும் எனத் தெரிவித்து உள்ளார். 

இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். குறிப்பாக நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பை இரட்டிப்பாக்கலாம் என கூறப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வழங்குவதில் சில சலுகைகள் அறிவிக்கப்படலாம். இடைக்கால பட்ஜெட்டில் குறைந்த வருமானம் பெறுவோருக்கும் சலுகைகள் அளிக்கப்படும் எனத்தெரிகிறது. குறைந்த வருமானம் பெறும் நபர்கள் வீடு வாங்குவதற்கு கூடுதல் மானியம் கிடைக்கும் எனவும் தகவல்கள் வந்துள்ளது.

கடந்த 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா, சாலை போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க் ஆகியோர் முன்னிலையில் அல்வா தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஆண்டு தோறும் அல்வா கிண்டும் விழா பாராளுமன்றத்தில் முடிவடைந்த பிறகு தான் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படுவது தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News