சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கேரள பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸா சட்ட நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது!
கேரளத்தை மாநிலம், தலசேரி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த 2016-இல் 11 -ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரை அதேப் பகுதியைச் சேர்ந்த ராபின் வடக்கன்செரில் என்ற பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் கர்ப்பமான சிறுமிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தை வடநாடு மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டது.
இந்த விஷயத்தை சிறுமியின் பெற்றோர் முதலில் மூடி மறைத்துள்ளனர். இருப்பினும், நாளடைவில் விஷயம் வெளியே தெரிந்ததும், இக்குற்றம் குறித்து தலசேரியில் உள்ள போக்ஸா (பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரை காக்கும் சட்டம்) சட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
சிறுமியை பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து அவருக்கு போக்ஸா சட்டம், இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின்கீழ் தலா 20 ஆண்டுகள் என மொத்தம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ராபினுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்துடன், இவ்வழக்கை மூடி மறைத்ததற்காகவும், பிறழ்சாட்சியாக மாறியதற்காகவும் சிறுமியின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.