இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வாசித்தார். பின்னர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி கூட்டாக இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் முக்கிய ஐந்து அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அம்சங்களில் வேளாண்மையைத் துறையிலும் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி உள்ளது. அதில், விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தக்கல செய்யப்படும். விவசாயக் கடன்களை திரும்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றம் கருதப்படாது. சிவில் குற்றமாக மட்டுமே பார்க்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
வேளாண்மையைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், கூடுதல் நிதி ஒதுக்கப்படும். தற்போது இருக்கும் விவசாய பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் உழவர்களின் தற்கொலையை தடுக்க முடியும்.