பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் மகாராஷ்டிர முழுவதும் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகள் அழைத்த முழு பந்தை மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 24 இன்று நடைபெற இருந்த வேலைநிறுத்த அழைப்பை வாபஸ் பெற மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி முடிவு செய்துள்ளது. அரசியல் கட்சிகள் பந்த் நடத்துவதைத் தடுக்கும் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஒரு பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி அழைத்த பந்த் நடைபெறாது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக பேசிய உத்தவ் தாக்கரே, "உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற இருந்த பந்த் வாபஸ் பெறப்படுகிறது. பந்த் குறித்த உயர் நீதிமன்ற உத்தரவை நாங்கள் ஏற்கவில்லை. இருப்பினும் மாநிலம் முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் வாயில் கருப்பு பட்டை அணிந்து மகாராஷ்டிர அரசுக்கு எதிராக போராடுவார்கள்" என்று அறிவித்தார். பந்த் தொடர்பாக பேசிய தலைமை நீதிபதிகள், "அரசியல் கட்சிகள் மஹாராஷ்டிராவில் சனிக்கிழமையன்று பந்த் நடத்தினால் அது அரசுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் முடங்க வாய்ப்புள்ளது. பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பெரும் பண இழப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே இதனை நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
பந்திற்கான காரணம்
தானே மாவட்டம் பத்லாபூரில் உள்ள பள்ளி ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இரண்டு பள்ளி சிறுமிகளுக்கு கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் கொந்தளித்த மக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியை அடித்து நொறுக்கினர். மேலும் பத்லாபூர் ரயில் நிலையத்தையும் கையகப்படுத்தி சுமார் 10 மணி நேரம் போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, சிலர் போலீசார் மீது கற்களை வீசியதில் அதிகாரிகள் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்கள் காரணமாக பத்லாபூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இணையம் முடக்கப்பட்டது, மேலும் அந்த பகுதியில் இருந்த பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன.
பத்லாபூரில் நடந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு சிவசேனா (யுபிடி), காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி (எஸ்பி) ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய எம்விஏ கூட்டணி, இன்று வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடக்கும் என்று அறிவித்து இருந்தது. இந்நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட்டு பந்தை வாபஸ் பெற வைத்துள்ளது. மேலும் மக்கள் போராட்டம் தொடர்பாக போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் போராட்டம் நடக்கும் என்றும் தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ