Maharashtra Jharkhand Exit Polls 2024 Latest News Updates: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்றுடன் (நவ. 20) சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் சனிக்கிழமை (நவ. 23ஆம் தேதி) நடைபெறும். தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
அந்த வகையில், Zee News ஊடகத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) தொகுப்பாளர் Zeenia தற்போது தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை (AI Exit Poll) வெளியிட்டார். இது ஆளும் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸின் மகா விகாஸ் கூட்டணி இடையே ஆட்சியமைக்க கடுமையான போட்டியை நிலவும் என கணித்துள்ளது.
Zeenia AI: மகாராஷ்டிரா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Zeenia வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி, பாஜகவின் மகா யுதி 129-159 இடங்களைப் பெறக்கூடும் என்றும் எதிர்க்கட்சியான மகா விகாஸ் கூட்டணி 124-154 இடங்களைப் பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 145 இடங்களை கைப்பற்றியாக வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Zeenia வெளியிட்ட கருத்துக்கணிப்பில் இரு கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவும் என்பது தெரியவருகிறது. கூடவே, மற்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இருந்து Zeenia வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முற்றிலும் வேறுப்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.
Zeenia, மகாராஷ்டிராவில் இந்த கருத்துக்கணிப்பை 10 லட்சம் மாதிரிகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். விதர்பாவில் பாஜகவின் மகா யுதி கூட்டணி முன்னணியில் உள்ளது. அவர்கள் அங்கு 32-37 இடங்களைப் பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் யார் முன்னிலை?
அதே நேரத்தில் மகா விகாஸ் கூட்டணி விதர்பாவில் 24-29 இடங்களைப் பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு மகாராஷ்டிராவில், மகா யுதி 28-33 இடங்களையும், மகா விகாஸ் கூட்டணி 33-42 இடங்களையும் பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு மகாராஷ்டிரா சரத் பவாரின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. மும்பையில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இரண்டுக்கும் தலா 15 இடங்கள் கிடைக்கும் என கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் முதல்வர்?
மேலும், Zeenia தரப்பில் மக்களிடம் மகாராஷ்டிராவில் யார் பிரபலமான முதல்வராக பார்க்கப்படுகிறார் என கேள்வி எழுப்பப்பட்டது. பெரும்பாலானோர் பாஜகவின் தேவேந்திர ஃபாட்னாவிஸ் என தெரிவித்திருக்கின்றனர். அவருக்கு பின் முறையே ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோரை மக்கள் தேர்வு செய்திருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் குப்தா கூறுகையில், எங்கள் பிரிவில் சுமார் 60% தலைவர்கள் பாஜகவுடன் திரும்புவதற்கு தயாராக உள்ளனர். காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உடனான எங்களது கூட்டணி கருத்தியல் ரீதியாக முரண்படுகிறது. இருப்பினும், இறுதி முடிவு உத்தவ் தாக்கரேவிடம் உள்ளது" என கூறியிருந்தார். எனவே, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் சிவசேனா இணையும் வாய்ப்புகளும் இருப்பதாக தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Zeenia AI: ஜார்க்கண்ட் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Zee News ஊடகத்தின் செயற்கை நுண்ணறிவு தொகுப்பாளர் Zeenia ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார். ஆளும் JMM மற்றும் BJP இடையே கடுமையான போட்டி நிலவும் என கணித்துள்ளது. ஜீனியாவின் கூற்றுப்படி, ஹேமந்த் சோரன் தலைமையிலான JMM 39-44 இடங்களைப் பிடிக்கும், அதே நேரத்தில் பாஜக 36-41 இடங்களைக் கைப்பற்றக்கூடும் எனவும் கணித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை கைப்பற்ற 41 தொகுதிகளை ஒரு கட்சி வென்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஜார்க்கண்டில் சுமார் 3 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் ஜீனியா இந்த முடிவை வெளியிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ