#MannKiBaat 2.0: நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!

நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவருக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

Last Updated : Jun 30, 2019, 12:56 PM IST
#MannKiBaat 2.0: நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்! title=

நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவருக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தன்னுடைய மன் கீ பாத் உரையை பிப்ரவரி 24 ஆம் தேதியோடு முடித்துக் கொண்டார் மோடி. இந்நிலையில், மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் மோடி இன்று முதல் முறையாக மீண்டும் வானொலியில் உரை நிகழ்த்தினார். 

மீண்டும் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றிருக்கும் நரேந்திர மோடியின் 54வது மன் கீ பாத் உரையை இன்று காலை 11 மணிக்கு நிகழ்த்தினார் மோடி. இன்று தன்னுடைய உரையில் இந்திய மக்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். “பிப்ரவரி மாதத்தில் மீண்டும் உங்களை சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தேன். மக்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தேன் என்று பிரதமர் மோடி கூறினார். வாக்களித்து என்னை தேர்வு செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நடைபெற்ற இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையில் என்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றிகள் என மோடி தனது துவக்க உரையை ஆரம்பித்தார். 

இந்த நான்கு மாத காலங்களில் மக்கள் மன் கி பாத்தினை மிகவும் மிஸ் செய்ததாக எனக்கு நிறைய பேர் சமூக ஊடகங்கள் வழியாக எழுதியிருந்தார்கள் என்று குறிப்பிட்டார். என்னுடைய கேதர்நாத் பயணம் தேர்தலுக்கான அரசியல் என்று எதிர் தரப்பினர் விமர்சித்தனர். ஆனால் நான் என்னைக் கண்டடையவே கேதர்நாத் சென்றேன் என குறிப்பிட்டார்.

குடிநீர் பிரச்சனை குறித்து நரேந்திர மோடியின் சமூக வலைதள கணக்குகளிலும், மோடி ஆப்பிலும் மக்கள் குறிப்பிட்டு வரும் கருத்துகளை தான் வாசித்து வருவதாக கூறினார். வேத காலங்களில் இருந்து நீருக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் குறித்து பேசினார். கிராம சபைகளில் அமர்ந்து இது குறித்து பேசி முக்கிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், மக்கள் அனைவரும் ஒன்று கூடி நீர் வள ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறினார்.

வேலூர் மாவட்டத்தில் நாக நதியை சுத்தம் செய்ய 20 ஆயிரம் மக்கள் ஒன்று கூடி உழைத்தனர் என்று மேற்கோள் காட்டிய மோடி, தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நீரை சேமித்து வைக்க எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளையும் கூறினார் அவர்.

மகாத்மா காந்தி பிறந்த இடமான போர்பந்தரில் காந்தியின் இரண்டாவடது வீட்டில் 200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கிணறு இன்றும் செயல்பட்டு வருகிறது. நீங்கள் அங்கு சென்றால் கீர்தி மந்திரில் அமைந்திருக்கும் அந்த மிக முக்கியமான நீர் சேமிப்பு முறையை பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், தேர்தல் மற்றும் அதற்கு இடைப்பட்ட காலங்களில் புத்தகங்கள் வாசிப்பதற்கு எனக்கு சிறிது நேரம் கிடைத்தது.  ப்ரேம்சந்தின் கதைகளை நான் என்னுடைய பயண நேரங்களில் வாசித்தேன். அவருடைய கதைகள் என்னுடைய மனதை தொட்டவை. அவருடைய கதைகள், இந்தியாவின் அன்றாட சூழலில் எப்படி நெருங்கி போகின்றன என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது என்று கூறி அவர் எழுதிய பல்வேறு கதைகளை மேற்கோள் காட்டினார் மோடி.

நீர் வள ஆதாரங்களை நாம் அனைவரும் ஒன்றாக பாதுகாக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துளி மழையையும் நாம் சேமிக்க மழை நீர் சேகரிப்பு முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மழை நீர் சேகரிப்பு தொடர்பாக தங்களுக்குத் தெரிந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பண்டைய இந்தியாவில் மழை நீர் எவ்வாறு  சேமிக்கப்பட்டது என்பதை அறிந்தவர்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாகவும், நீர் நிலைகள் குறித்த பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும் சிறந்த ஆலோசனைகளை வைத்திருப்பவர்கள்  #Jalashakti என்ற ஹேஷ்டேக் மூலமாக தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டார். 

 

Trending News