Mi-17V-5: பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குறித்த முழுத் தகவல்கள்

முப்படைத் தளபதி பிபின் ராவத்  பயணித்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் 250 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது. அதன் விலை ரூ.145 கோடி.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2021, 06:51 PM IST
  • உலகின் மிக நவீனமான ஹெலிகாப்டராக இது கருதப்படுகிறது.
  • ஹெலிகாப்டரில் 4,500 கிலோ வரை பொருட்கள் எடுத்துச் செல்லலாம்.
  • குளிர் நிறைந்த உயரமான மலைகள், பாலைவனங்கள் என எந்த தட்பவெப்பத்திலும் இயங்கும்.
Mi-17V-5: பிபின் ராவத்  பயணித்த ஹெலிகாப்டர் குறித்த  முழுத் தகவல்கள் title=

இந்திய ராணுவத்தின் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர், இன்று காலை,  விபத்தில் சிக்கியது. பிபின் ராவத் பயணம் செய்தது Mi-17V-5 வகை ஹெலிகாப்டர். ரஷ்யாவின் கஸான் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ராணுவ ஹெலிகாப்டர் இது. 2015ம் ஆண்டில் இந்த ஹெலிகாப்டர் ஒன்றின் விலை 145 கோடி ரூபாய்.

உலகின் மிக நவீனமான ஹெலிகாப்டராக இது கருதப்படுகிறது. ராணுவத் தாக்குதல் நடத்துவது, வீரர்களை ஏற்றிச் செல்வது, எல்லைக் கண்காணிப்பு, தீயணைப்பு, ராணுவத்துக்கு சரக்குகளை எடுத்துச் செல்வது என எல்லாப் பணிகளுக்கும் பயன்படுகிறது.

அதிகபட்சமாக 36 பேர் வரை பயணம் செய்யக்கூடிய பெரிய ஹெலிகாப்டரில் 4,500 கிலோ வரை பொருட்கள் எடுத்துச் செல்லலாம். மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டரில், அதிகபட்சமாக 580 கி.மீ தூரம் வரை தொடர்ச்சியாக பயணிக்கலாம்.

ALSO READ | IAF Helicopter Crash: முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு

Mi-17V-5 ஹெலிகாப்டர்

சில ஹெலிகாப்டர்களை இரவில் இயக்க முடியாது. ஆனால், இது இரவு பகல் என எந்த நேரத்தில் பயணம் செய்யும். குளிர் நிறைந்த உயரமான மலைகள், பாலைவனங்கள் என எந்த தட்பவெப்பத்திலும் இயங்கும். 6 ஆயிரம் மீட்டர் உயர மலைப்பகுதியில் கூட அநாயாசமாக இது பயணம் செய்யும்.

இமயமலையின் பனி படர்ந்த சியாச்சின் பிரதேசத்தில் எல்லைக்காவல் புரியும் வீரர்களுக்கு முன்பெல்லாம் ஆயுதங்களையும் உணவுப்பொருட்களையும் எடுத்துச் சென்று தருவது கடினமாக இருந்தது. Mi-17V-5 ஹெலிகாப்டர் வந்த பிறகே அந்தப் பிரச்னை தீர்ந்தது. இப்போது சியாச்சினில் இருக்கும் வீரர்களுக்கு எல்லாவற்றையும் சுமந்து செல்வது இந்த ஹெலிகாப்டர்கள் (IAF Helicopter) தான்.

இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள், ராக்கெட்கள், மெஷின் கன்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கும். சர்ஜிகல் ஸ்ட்ரைக், தீவிரவாதிகளை வேட்டையாடுதல் போன்ற விஷயங்களுக்கு இது அதிகம் உதவும். அதேபோல, ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்கும் பாதுகாப்பு கவசமும் இதில் இருக்கும்.

இதை இயக்கும் பைலட்டால் இரவு நேரத்திலும் துல்லியமாகப் பாதையைப் பார்க்க முடியும். மேலும் ஆட்டோ பைலட் சிஸ்டம் பொருத்தப்பட்ட மிகச் சில ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. அதனால், பைலட் இல்லாமலும் இது தானாக இயங்கும்.

கவச வாகனம் போல பாதுகாப்புத் தகடுகள் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் என்பதால், விபத்தில் சிக்கினாலும் உள்ளே இருப்பவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம். இதன் எரிபொருள் டேங்கும் விபத்தில் வெடித்து சிதறி எரியாத படி பாலியூரிதேன் பாதுகாப்பு கொண்டது. தீவிபத்து ஏற்பட்டால் அணைக்கும் கருவிகளும் உள்ளன. என்றாலும், பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி எரிந்திருக்கிறது.

ALSO READ | குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்!

பொதுவாக ரஷ்ய போர்க்கருவிகளையோ, ராணுவ விமானங்களையோ அமெரிக்கா வாங்காது. ஆனால், ஆப்கானிஸ்தான் போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிலிருந்து 63 Mi-17V-5 ஹெலிகாப்டர்களை வாங்கியது.

Mi-17V-5 ஹெலிகாப்டர்

இந்திய விமானப்படை விரும்பி வாங்கும் ஹெலிகாப்டராக  இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் 163 Mi-17V-5 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது. இந்தியாவில் இவற்றைப் பழுது பார்க்கும் வசதிகளையும் ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

மிகவும் பாதுகாப்பானது என்பதால், வி.ஐ.பி-க்கள் பயணம் செய்வதற்காக இதில் 10 ஹெலிகாப்டர்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் என்று பலருமே குறுகிய தூரப் பயணங்களுக்கு பயன்படுத்துவது இந்த ரக ஹெலிகாப்டரைத் தான்.மிக அரிதாகவே இந்த ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கும். அப்படி ஒரு விபத்தில் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியே சிக்கியது சோகம்.

ALSO READ | Breaking News: நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து: நான்கு பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News