புது டெல்லி: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும், பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
முதலில் பிரதமராக நரேந்திர மோடி உறுதி எடுத்துக் கொண்டார். இதையடுத்து நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சரவை பட்டியலும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாராளுமன்ற தொடர், பட்ஜெட் மற்றும் மக்களவை சபாநாயகர் போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவாக பணியின்போது வீரமரணம் அடையும் அனைத்து மாநிலங்களின் போலீசாரின் வாரிசுகளுக்கு பிரதமர் மந்திரியின் கீழ் செயல்படும் திட்டமான தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையில் விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அதன்படியே, மாணவர்களுக்கான உதவித்தொகை 2000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாகவும், மாணவிகளுக்கான உதவித்தொகை 2250 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டு பிரதமர் நரேந்திரே மோடி ஒப்புதல் அளித்தார்.