நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை; மும்பை எரவாடா சிறை நிர்வாகத்திடம் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருப்பதாக பேரறிவாளன் தரப்பு தகவல்!!
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.
நடிகர் சஞ்சய் தத் மீதான வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்தில் அவருக்கு 5 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது. நடிகர் சஞ்சய் தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி மும்பை சிறையிலிருந்து தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவில்லை என ஆர்டிஐ மூலம் பேரறிவாளன் தரப்பு தகவல் பெற்றதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத்தை விடுவிக்கும் முன்பு மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் கருத்தை கேட்கவில்லை என பேரறிவாளன் தரப்பு கூறியுள்ளது.