5-வது முறையாக கூட்டணியில் பிளவு : 8-வது முறையாக முதலமைச்சரான நிதிஷ்குமாரின் கதை

Nithish kumar : யாரும் எதிர்ப்பாக்காத நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நிதிஷ்குமார். 

Written by - Chithira Rekha | Last Updated : Aug 10, 2022, 04:43 PM IST
  • 8-வது முறையாக பீகார் முதலமைச்சரான நிதிஷ்குமார்
  • 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமா?
  • பீகாரில் தனித்து விடப்பட்டதா பாஜக?
5-வது முறையாக கூட்டணியில் பிளவு : 8-வது முறையாக முதலமைச்சரான நிதிஷ்குமாரின் கதை title=

தேசிய அரசியலை நன்கு அறிந்தவர்களுக்கு நிதிஷ்குமாரின் செயல் பெரிய ஆச்சர்யத்தைத் தந்திருக்காது. ஏனினில் அவர் கூட்டணியை உடைப்பது இது முதல் முறையல்ல.  மாணவப் பருவத்தில் ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் லாலு பிரசாத்துடன் ஒன்றாக இணைந்து செயல்பட்ட நிதிஷ்குமார், 1990-ம் ஆண்டு, ஜனதா தளம் சார்பில் லாலு பிரசாத் பீகார் முதலமைச்சராவதில் பெரும் பங்கு ஆற்றினார்.  பின்னர், கட்சிக்குள் லாலுவின் செல்வாக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு பிரிந்து வந்து, மூத்த சோசலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டசுடன் இணைந்து சமதா கட்சியை உருவாக்க முயற்சி செய்தார். 

1997-ம் ஆண்டு லாலு பிரசாத் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைத் தொடங்கியதால், 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் வெகுவாகப் பிரிந்து ஜனதா தளம் படுதோல்வியைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, 2003-ம் ஆண்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான சமதா கட்சியும், சரத் யாதவ் தலைமையிலான ஜனதா தளமும் ஒன்றாக இணைந்து ஐக்கிய ஜனதா தளம் உருவானது. 

அரசியல் வாழ்வில் ஒன்றாகப் பயணணித்த லாலு பிரசாத்தும், நிதிஷ்குமாரும் அதன் பின் எதிர் எதிர் முனையில் போட்டியாளர்களாக இருக்க நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இணைந்த நிதிஷ்குமார், 1998-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை கூட்டணியில் நீடித்தார். இடைப்பட்ட காலத்தில், 2005, 2010 பீகார் சட்டமன்றத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, பீகாரின் முதலமைச்சராகப் பதவி வகித்தார் நிதிஷ்குமார். 

 Nitish Kumar sworn in as Bihar CM for eighth time

ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது, மதசார்பற்ற அடையாளம் கொண்ட தலைவரே பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டுமெனக் கூறி, நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம், 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். 

மேலும் படிக்க | பாஜக கூட்டணியில் இருந்து ஏன் விலகினார் நிதிஷ்குமார்?

2015-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில், பழைய நண்பரான லாலு பிரசாத்துடன் மீண்டும் கூட்டணி அமைத்தார் நிதிஷ்குமார். இந்தக் கூட்டணியில், காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில், 178 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் நிதிஷ்குமார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி பொறுப்பேற்றார். ஆனால், இந்தக் கூட்டணி 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக, தேஜஸ்வி ராஷ்டிரிய ஜனதா தள ஆதாரவாளர்களிடமிருந்து நிலத்தைப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லாலு பிரசாத்திற்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. 

Nitish Kumar sworn in as Bihar CM for eighth time

இதனைத் தொடர்ந்து, தேஜஸ்வியை நிதிஷ்குமார் பதவி விலகக் கூறிய நிலையில், அவர் மறுத்ததால் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார் நிதிஷ். பின்னர் இதே கூட்டணியில் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றாலும், தொடக்கம் முதலே இரு கட்சியினர் இடையேயும் புகைச்சல் இருந்தது. சிராக் பாஸ்வான் மூலம் ஓட்டுகள் பிரிந்ததால், ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றி பாதிக்கப்பட்டது, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து மறுக்கப்பட்டது, பாட்னாவுக்கு மத்திய பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படாதது, சாதி வாரி கணக்கெடுப்பு, அக்னிபாத் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கும், ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடையே மோதல் நீடித்த நிலையில், மீண்டும் கூட்டணியை முறித்து மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கை கோர்த்துள்ளார் நிதிஷ்குமார்.

ஆனால் நிதிஷ்குமாரின் இந்த நகர்வு, தனது முதலமைச்சர் பதவியை தக்க வைப்பதற்காக மட்டுமின்றி 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ 17 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து வரும் நிதிஷ்குமார், தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னோட்டமாகவே பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், பீகார் போன்ற பெரிய மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்றது. லோக் ஜன சக்தி பிளவு பட்டுள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தற்போது தனித்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிதிஷ்குமாரின் கணக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க | பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா; பாஜக உறவை முறித்துக் கொண்டது JDU

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News