உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டுள்ளார்!
உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வரும் மே 19-ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுவது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த சில நாட்களாக இத்தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டு வந்தது. கட்சி தலைமை அனுமதித்தால் தான் போட்டியிட தயாராக இருப்பதாக பிரியங்காவும் செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தார். இந்நிலையில் தற்போது வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
Congress Central Election Committee announces the next list of candidates for the ensuing elections to the Lok Sabha from Uttar Pradesh. pic.twitter.com/zyol8wPd06
— Congress (@INCIndia) April 25, 2019
அதே வேலையில் கோரக்பூர் தொகுதியில் மதுசூதன் திவாரி போட்டியிடுவார் எனவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பாஜக மாணவர் அணியின் முன்னாள் தலைவரான அஜய் ராய் மக்களவை தேர்தலில் தனக்ககு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என சமாஜ்வாடி கட்சிக்கு தாவினார். பின்னர் அங்கிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த ராய் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார்.
இத்தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார், இரண்டாம் இடத்தை ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கேஜிரிவால் தக்க வைக்க, மூன்றாம் இடத்தை அஜய் ராய் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
வரணாசி தொகுதியை பொருத்தமட்டில் முக்கிய வேட்பாளராக பாஜக-வில் இருந்து நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் சமாஜ் கட்சி - பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மாநிலங்களவை உறுப்பினர் ஷியாமலா யாதவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.