புதுடெல்லி: செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை அதிகபட்சமாக ரூ5,000 வரை மட்டுமே வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு, பழைய 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8-ம் தேதி வாபஸ் பெற்றது. அதன் பிறகு, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் கடைசியாக டிசம்பர் 15-ம் தேதிக்கு பிறகு வங்கிகள் தவிர வேறு என்கவும் செயல் படாது என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய புதிய கட்டுப்பாட்டினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணம் எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளைப் போல, வங்கிகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
அதன்படி, பழைய ரூபாய் நோட்டுகளை அதிகபட்சமாக ரூ.5000 வரை மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்ய முடியும். டிசம்பர் 30-ம் தேதி வரை ஒரு வங்கிக் கணக்கில் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்று அதிரடி கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.