புதுடெல்லி: அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் நாளை வரை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி போடப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வு முன்பு நேற்று நடைபெற்ற நிலையில், வழக்கை இன்று ஒத்திவைத்தத்தோடு, ப.சிதம்பரத்தை இன்று (ஆகஸ்ட் 27) மதியம் 12 மணி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் வைத்த அனைத்து வாதங்களுக்கும் விரிவாக பதில் அளிக்க 4 மணி நேரம் வேண்டும் என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அமலாக்கத்துறை பண மோசடி வழக்கில் நாளை வரை ப.சிதம்பரத்தை கைது செய்யவும் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் நாளை பிற்பகல் 2 மணி முதல் தங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும் என துஷார் மேத்தாவுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.