பிரதமர் மோடியைவிட பெரிய அனகோண்டா வேறேதும் இல்லை என ஆந்திர நிதியமைச்சர் ராமகிருஷ்ணுடு விமர்சித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பினை கடந்த அக்டோபர் 6-ஆம் நாள் தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் வெளியிட்டார்.
இத்தேர்தல்களில் வெற்றி பெற்ற ஆட்சியை பிடிக்க நாட்டின் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.
இதையடுத்து, ஆந்திர நிதியமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான யனமல ராமகிருஷ்ணுடு பிரதமர் மோடியைவிட பெரிய ‘அனகோண்டா’ வேறேதும் இல்லை என்று பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறியது; பிரதமர் நரேந்திர மோடியைவிடப் பெரிய மலைப்பாம்பு வேறேதும் இல்லை என்றும், அவர் சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற பெரிய அமைப்புக்களையே விழுங்கிவிடுகிறார் என்றும் ராமகிருஷ்ணுடு விமர்சித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர், தேளுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதனால் அவருக்கு எதிராக பாஜக சார்பில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர நிதியமைச்சர் ராமகிருஷ்ணுடுவும் பிரதமர் மோடியை அனகோண்டா பாம்புடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவரது சர்சைக்கொரிய இந்த பேச்சுக்கு, பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, BJP தலைவர் கண்ணா லட்சுமிநாராயணா கூறியபோது: தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஊழலின் அரசர் ஆவார்; அவர் எந்தளவுக்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து செயல்படுவார். நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்த சந்திரபாபு நாயுடு, தற்போது அவரை மோசடியாளராக சித்திரிக்க முயற்சிக்கிறார்.
அரசியல் போர்வையில், நாட்டை கொள்ளையடிக்க அவர்கள் முயற்சித்தால், அது ஒருபோதும் முடியாது.சந்திரபாபு நாயுடு தனது ஊழல் வரலாறு வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார். இதனால்தான் காங்கிரஸ் கட்சியுடன் அவர் கைகோர்த்து உள்ளார் என தெரிவித்துள்ளார்.