இணைப்பு திட்டங்கள் ஓர் நாட்டின் இறையாண்மையை பாதிக்க கூடாது!

80 நாடுகளுடன் சீனா மேற்கொண்ட ‘பெல்ட் அண்ட் ரோடு’ என்ற மிகப்பெரிய வர்த்தகப் பாதைத் திட்டத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாகத் தெரிவித்துவிட்டார்.

Last Updated : Jun 10, 2018, 08:07 PM IST
இணைப்பு திட்டங்கள் ஓர் நாட்டின் இறையாண்மையை பாதிக்க கூடாது! title=

சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் 80 நாடுகளுடன் சீனா மேற்கொண்ட ‘பெல்ட் அண்ட் ரோடு’ என்ற மிகப்பெரிய வர்த்தகப் பாதைத் திட்டத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாகத் தெரிவித்துவிட்டார்.

SCO உச்சி மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற முழு அமர்வில், 8 உறுப்பு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், தீவிரவாதத்தின் விளைவாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாட்டுக்கு ஆப்கானிஸ்தான் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகக் தெரிவித்தார். அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி துணிச்சலான நடவடிக்கை எடுத்துவருவதாக கூறிய அவர், அருகில் உள்ள நாடுகள் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஷாங்காய் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை வெறும் 6% மட்டுமே என்றும், கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இதை பலமடங்காக உயர்த்த முடியும் என்றும் மோடி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதேவேலையில் இந்தியாவில், சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உணவுத் திருவிழா, பவுத்த மதத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஷாங்காய் கூட்டுறவு நாடுகள் கூட்டுறவில் யூரேஸியன் பொருளாதார ஒன்றியம், பெல்ட் அண்ட் ரோடு முயற்சி ஆகியவற்றை உருவாக்குவதற்கான சீனாவின் முயற்சியை உறுப்பு நாடுகள் பாராட்டியுள்ளனர். இதன் மூலம் பிராந்திய நாடுகளின் சர்வதேச அமைப்புகளின் பலதரப்பு கூட்டுறவுகளின் அடிப்படை ஆற்றலை ஒன்று திரட்டி பரந்துபட்ட, திறந்த, பரஸ்பரம் பயன் தரக்கூடிய, சமத்துவக் கூட்டுறவு உருவாக்க முடியும் எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது "எந்த ஒரு மகா கூட்டுறவு, தொடர்பு வர்த்தகத் திட்டமாயினும் அது ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஓர்மையையும் மதிப்பதாக இருக்க வேண்டும், ஆகவே அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றை உறுதி செய்யும் திட்டத்துக்கு இந்தியா தன் முழு ஆதரவையும் அளிக்கும் என சூசகமாக தெரிவித்து, இதன் மூலம் இந்தியாவுக்கு இந்த தீர்மானத்தில் உடன்பாடில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சீன அதிபரின் கனவு திட்டமான BRI என்றழைக்கப்படும் பெல்ட் அண்ட் ரோடு மெகா வர்த்தக இணைப்புத் திட்டத்தில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரப் பாதை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும். இது இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் பிரதமரின் இன்றைய உரை இந்த திட்டத்திற்கான எதிர்ப்பு கொடியாய் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News