புது தில்லி: பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, இன்று (வெள்ளிக்கிழமை) சிவசேனாவுடன் இணைந்தார். மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரியங்கா சதுர்வேதி சிவசேனை கட்சியில் இணைந்துள்ளார் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். அவர் கட்சியின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். சிவசேனா கட்சியின் இணைத்துக் கொண்டதற்கு உத்தவ் தாக்கரேவுக்கு நன்றி தெரிவித்தார் பிரியங்கா சதுர்வேதி.
பின்னர் பேசிய பிரியங்கா கூறியது, "சிவசேனாவுடன் இணைவதற்கு முன்பு, இதைப்பற்றி நான் நிறைய சிந்தித்தேன். பெண்களின் கௌரவத்திற்காக நான் காங்கிரஸை விட்டு விலகினேன். எனக்கு டிக்கெட்டை கொடுக்கவில்லை என்பதற்காக விலகவில்லை. காங்கிரஸ் என்னை மதிப்பதில்லை. மதுரா தொகுதி எனக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸிடம் நான் கேட்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட சச்சரவுகளால் கோபமடைந்து காங்கிரசை விட்டு விலகி வந்தேன் எனக் கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும், ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தா மும்பையை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து கட்சி தலைமைக்கு கடிதத்தை அனுப்பினார். அதில்,10 வருடத்துக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த நான், அதை நூறு சதவிகிதம் அர்ப்பணிப்புடன் என் வேலையை சரியாகவே செய்திருக்கிறேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக சேவை செய்து வந்தேன். ஆனால் சில நாட்களாக எனது சேவை கட்சியில் மதிக்கப்படவில்லை என உணருகிறேன்.
சில நாட்களுக்கு முன்பு மதுராவில் செய்தியாளர் சந்திப்பில் ஒரு சில கட்சி நிர்வாகிகள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டனர். அவர்களை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்ப்பட்டனர். ஆனால் மீண்டும் அவர்களை கட்சிக்குள் சேர்க்கப்பட்டு உள்ளது. இது நான் அளித்த புகாரை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதற்கு பிறகும் நான் கட்சியில் இருப்பது கண்ணியமற்றது என நினைக்கிறேன். அதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என கடிதத்தில் தனது ராஜினாமா குறித்த விவரங்களை கூறியுள்ளார்.