பாராளுமன்றத்தில் ரஃபேல் விமானம் தொடர்பான விவாதத்தில் மீண்டும் ராகுல் காந்தி கண்ணடித்தார்; அதற்க்கு BJP "ராகுலுக்கு உதவி தேவைப்படுகிறது" என விமர்சித்துள்ளது....
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் மக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மிகவும் காரசாரமாக பேசிவிட்டு, பின்னர் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தார். பின் தன் இருக்கைக்கு திரும்பியதும் அருகில் இருந்த எம்பியைப் பார்த்து கண்ணடித்தார். ராகுல் காந்தியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் மீண்டும் பாராளுமன்றத்தில் ராகுல் கண்ணடித்த சம்பவம் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், நேற்று ரபேல் விவகாரம் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, ஜாலியாக கண்ணடித்துள்ளார் ராகுல். அ.தி.மு.க எம்.பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசிக்கொண்டு இருந்தபோது அவருக்கு பின் வரிசையில் அமர்ந்துகொண்டு மேஜையை தட்டி உற்சாகப்படுத்தினார். பின்னர், ராகுல் காந்தி கண்ணடித்து சிரித்தார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Rahul Gandhi ‘winks’ again... This time during the all serious debate on #Rafale. He surely needs help! pic.twitter.com/rncFdTlphU
— Amit Malviya (@amitmalviya) January 4, 2019
ராகுல் காந்தியின் இந்த செயலை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ராகுல் காந்தி கண்ணடிக்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், “ராகுல் மீண்டும் கண்ணடித்துள்ளார். இந்த முறை ரபேல் தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது கண்ணடித்துள்ளார். எனவே, அவருக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவை” என குறிப்பிட்டுள்ளார்.