மும்பை: டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது குழுமத்தின் எதிர்கால வெற்றிக்கு அவசியமானது என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 24-ம் தேதி அதிரடியாக சைரஸ் மிஸ்திரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். சைரஸ் மிஸ்திரி நீக்கத்தைத் தொடர்ந்து டாடா சன்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவராக ரத்தன் டாட்டா செயல்பட்டுவருகிறார். இதையடுத்து, சைரஸ் மிஸ்திரி, ரத்தன் டாடா மீது பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறார். இந்த விவகாரம் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி வரை சென்றுவிட்டது.
இந்த சூழ்நிலையில் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது குறித்து டாடா குழும ஊழியர்களுக்கு கடிதம் மூலம் ரத்தன் டாடா விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் டாடா குழுமத்தின் எதிர்கால வெற்றிக்கு மிஸ்திரியின் நீக்கம் அவசியம் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். மிஸ்திரியை நீக்கும் கடினமான முடிவை மிகக் கவனமாக டாடா குழுமம் எடுத்துள்ளதாகவும் மேலும் நீண்ட பரிசீலனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ரத்தன் டாடா கூறியுள்ளார்.