பாலாவின் வணங்கான் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

Vanangaan Movie Review: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jan 10, 2025, 07:29 PM IST
  • இன்று வெளியாகி உள்ளது வணங்கான்.
  • அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • பாலா இந்த படத்தை இயக்கி உள்ளார்.
பாலாவின் வணங்கான் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்! title=

பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் நடித்துள்ள வணங்கான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வணங்கான் படம் ஆரம்பித்ததில் இருந்து நிறைய சர்ச்சைகளுக்கு உள்ளானது. ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யா நடித்து வந்த நிலையில் திடீரென்று அவர் விலகினார். அவருக்கு பதில் அருண் விஜய் தற்போது நடித்துள்ளார். கிருத்தி ஷெட்டி முதலில் கமிட் ஆகி இருந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். பெரிய போராட்டங்களுக்கு பிறகு வணங்கான் படம் தற்போது ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | வணங்கான் படம் வெளியாவதில் சிக்கல்!! என்ன பிரச்சனை?

படத்தின் கதை

அருண் விஜய்யும் அவரது தங்கை ரிதாவும் கன்னியாகுமரி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அருண் விஜய் கோட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு படத்தில் காது கேட்காது, பேச்சும் வராது. அந்த பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார். மறுபுறம் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரிதா ஒரு டாட்டூ ஸ்டூடியோவில் பணிபுரிகிறார். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு அனைவரிடமும் சண்டைக்குச் செல்லும் கோட்டியை அவரது தங்கை அந்தப் பகுதியில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்த்து விடுகிறார். அங்கு நடக்கும் ஒரு அசம்பாவிதத்தால் இவர்களது வாழ்க்கை மாறுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து எப்படி இவர்கள் தப்பித்தார்கள் என்பதே வணங்கான் படத்தின் கதை.

இயக்குனர் பாலாவின் கைவண்ணம்

பாலாவின் படங்கள் என்றால் சற்று வித்தியாசமாக தான் இருக்கும். அந்த வகையில் வணங்கான் பாலாவின் கைவண்ணத்தில் ஒரு புது கலவையாக உருவாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவத்தை தன்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாலா. பாலியல் வன்முறை தொடர்பான காட்சிகளை இப்படித்தான் காட்ட வேண்டுமா என்ற கேள்வி பாலாவை நோக்கி எழுகிறது. உணர்ச்சி பூர்வமாக அந்த காட்சிகள் இருந்தாலும் அப்படி காட்டியாக வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. மகாராஜா,  வேட்டையன் போன்ற படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் இது போன்ற சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் வணங்கான் படத்தை பார்க்கும்போது பாலாவின் முந்தைய படங்களான நாச்சியார் மற்றும் நான் கடவுள் போன்ற படங்களும் ஞாபகத்திற்கு வந்து செல்கிறது.

அருண் விஜய் நடிப்பு

காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு கதாபாத்திரத்தில் அருண் விஜய் படம் முழுக்கவே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார், இது அவரது கரியரில் ஒரு முக்கியமான படமாக அமையலாம். ரோஷினி பிரகாஷ் மற்றும் ரிதா நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் நடிக்கிறார்கள் என்று எந்த ஒரு இடத்திலுமே படம் பார்க்கும் நமக்கு தெரியவில்லை. படத்தின் ஆரம்பத்தில் நிறைய இடங்களில் நகைச்சுவை காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது.

சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் பயங்கரமாக எடுக்கப்பட்டுள்ளது. ரோப் கட்டி இழுப்பதும், டூப் வைப்பதும் இல்லாமல் மண் மற்றும் சகதியில் இறங்கி அருண் விஜய் சண்டையிட்டுள்ளார். இரண்டாம் பாதியில் வரும் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகள் நன்றாக உள்ளது. அவர்கள் இருவரும் படத்தை மேலும் விறுவிறுப்பாக மாற்றுகின்றனர். நீதிபதி கதாபாத்திரத்தில் மிஷ்கின் கைத்தட்டல்களை பெறுகிறார். ஜிவி பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

இரண்டு மணி நேரமே படம் ஓடினாலும் நீண்ட நேரம் படம் பார்க்கும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. திரைக்கதையில் இன்னும் சற்று சுவாரசியத்தை சேர்த்து இருக்கலாம். பாலா படங்கள் என்றால் அழுது கொண்டே தான் வெளியே வர வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு கிளைமாக்ஸ் வைத்திருப்பார் போல பாலா. அதை மட்டும் நீக்கி இருந்தால் படம் இன்னும் நன்றாகவே வந்திருக்கும். வணங்கான் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள மற்றொரு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை பேசும் படம்.

மேலும் படிக்க | ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News