பெங்களூரு: பெங்களூரில் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.4.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு, பலர் வங்கியாளர்களில் பணத்தை மாற்றி வருகின்றனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாள்களாக அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூருவில் 2 பொறியாளர்கள் மற்றும் மாநில அரசு பணியாளர்களர்கள் சிலர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். சுமார் 50 பேர் கொண்ட வருமான வரித்துறை சோதனை குழு பெங்களூரு, சென்னை, ஈரோடு ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சிவில் கான்ட்ராக்டர் ஒருவரின் வீட்டிலிருந்து ரூ.4.7 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள், 7 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி என தெரிய வந்துள்ளது.
பழைய நோட்டுக்களை மாற்றி தருவதற்காக இன்ஜினியர்கள் மற்றும் கான்ட்ராக்டர்களுக்கு கமிஷனாக கொடுப்பதற்காக தங்கம் மற்றும் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். தங்கக்கட்டிகள் சிலவும் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மருத்துவர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 10 லட்சம் மதிப்பிலான புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சோதனையில் ரூ.100 மற்றும் பழைய ரூ.500 நோட்டுகள் பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.