சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் இன்று டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் சரணடைந்தார்!
டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சஜ்ஜன் குமார் 1984-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கில் ஆயுல் தண்டனை பெற்றுள்ளார். மேலும் அவர் இம்மாத இறுதிக்குள் சரணடைய வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்பளித்தது. இந்நிலையில் இன்று அவர் டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
முன்னதாக தனது மகன்களுக்கு சொத்துக்களை பிரித்து அளிக்க வேண்டும் என கூறி ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இன்று அவர் டெல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் மண்டோலி சிறைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
சீக்கிய கலவரம் (1984)...
கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் நாள், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய மெய்காவலர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் செய்தி அறிந்ததும் டெல்லியில் இரு தினங்களுக்கு சீக்கியர்களுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் நடைபெற்றன.
கிழக்கு டெல்லியில் திரிலோக்புரி என்னுமிடத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. வீடுகளைத் தீவைத்துக் கொளுத்தியதாகவும், சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் 88 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதில் தற்போது 47 பேர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர்.
இது குறித்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனத்தீர்ப்பளித்ததுடன் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டப்பட்டது. விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம் முறையீட்டு மனுவை சமீபத்தல் தள்ளுபடி செய்தது. மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்து, அவர்கள் அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், முன்னதாக இந்த கலவர வழக்கில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கடந்த டிசம்பர் 17-ஆம் நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.