மும்பை: மகாராஷ்டிராவில் (Maharashtra) ஆட்சி அமைப்பதில் சிவசேனா (Shiv Sena) இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவி என்ற நிலையில் பிடிவாதமாக இருந்து வருகிறார். அதாவது 50-50 சூத்திரத்திற்கு ஒப்புக் கொண்டால்தான் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்து தாங்கள் முடிவு செய்வோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், பாஜக தலைமையில் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான 'பி' திட்டத்தை பிஜேபி தயார் செய்துள்ளது. சிவசேனாவின் 56 எம்.எல்.ஏக்களில் 45 பேர் தனி கட்சியை அமைப்பதன் மூலம் பாஜகவை ஆதரிக்க தயாராக இருப்பதாக பாஜகவின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ககாடே கூறியுள்ளார்.
ஜீ (ZEE) மீடியா விவாத நிகழ்ச்சியில், சிவசேனாவின் 56 எம்எல்ஏக்களில் 45 பேர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக ககாடே கூறினார். மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது, 45 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. இது பாஜகவின் "பிளான் பி" அரசியலாக பார்க்கப்படுகிறது.
சிவசேனா நிபந்தனைக்கு தலைவணங்க முடியாது என்று பாஜக முடிவு செய்துள்ளது. மேலும், அக்டோபர் 31 ஆம் தேதி வரை சிவசேனாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கால எல்லைக்குள் சிவசேனா உடன்படவில்லை என்றால், பாஜக தனது "B" பிளான் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் எனத் தெரிகிறது.
திட்டம் "B" படி, சிவசேனாவுடன் அல்லது சிவசேனா இல்லாமல் ஆளுநரிடம் சென்று அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கையை பாஜக சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. அவர்களுடன் சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு கடிதத்தையும் கொண்டு செல்ல திட்டம்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. இரண்டரை ஆண்டு காலத்திற்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்கவும், ஆட்சியில் சமபங்கும் பா.ஜ.,விடம் சிவசேனா கேட்டிள்ளது.
இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க நாட வேண்டி உள்ளதால், அதற்க்கான திட்டத்தை தீட்டி வருகிறது.