திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில், தடுப்பு கயிறு அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், மண்டலபூஜையையொட்டி கடந்த மாதம் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று திடீரென்று சபரிமலையில் நெரிசல் ஏற்பட்டது. மண்டலபூஜையையொட்டி கூட்டம் அதிகமாக இருப்பதால், பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதற்காக தடுப்பு கயிறு கட்டப்பட்டு உள்ளது. பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதால், சன்னிதானத்துக்கும் மாளிகைபுரத்துக்கும் இடையே கட்டப்பட்டு இருந்த தடுப்பு கயிறுதிடீரென்று அறுந்தது. இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். பயங்கர நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி 20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சன்னிதானத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தடுப்பு கயிறு அறுந்து பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் நெரிசல் ஏற்பட்டதாகவும், இதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பதனம்திட்டா மாவட்ட கலெக்டர் ஆர்.கிரிஜா தெரிவித்தார்.