ஓகி புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு!

ஓகி புயல் மற்றும் பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ. 133.05 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Updated: Feb 27, 2018, 11:26 AM IST
ஓகி புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு!
File Pic

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர்நிலை குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளம், பிகார், குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: கடந்த ஆண்டில் ஏற்பட்ட ஒக்கி புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ. 133.05 கோடி ஒதுக்குவது என முடிவு எடுக்கப்பட்டது. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு ரூ.169.63 கோடி, 2017-18-இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிகாருக்கு ரூ.1,711.66 கோடி, குஜராத்துக்கு ரூ. 1,055.05 கோடி, 2017-18-இல் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தானுக்கு ரூ. 420.57 கோடி, 2017-இல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 420.69 கோடி, 2017-இல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ.838.85 கோடி, 2017 -இல் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கருக்கு ரூ.395.91 கோடி, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ரூ.836.09 கோடி ஒதுக்கீடு செய்யவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவ. 29-ஆம் தேதி ஒக்கி புயலால் கடுமையான சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக, மாவட்டத்தில் இதுவரை கண்டிராத வகையில் விவசாய நிலங்கள், வீடுகள், சாலைகள், மின் கம்பங்கள் சேதமடைந்தன. பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்புத்தன்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3,161 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பவில்லை. காணாமல் போன மீனவர்களை கப்பற்படை, இந்திய கடலோரக்காவல் படை, சிறு விமானம் மற்றும் மீன்வளத் துறை போன்ற மீட்புக் குழுவினரால் தேடும் பணிகள் நடைபெற்றன. சில தீவுகளில் கரை ஒதுங்கிய மீனவர்களும், அவர்களது படகுகளும் மீட்கப்பட்டன.

ஒக்கி புயலினால் மரணமடைந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4.6 கோடி, காயமடைந்த 20 மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம், கரை திரும்பாத 234 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.11.70 லட்சம், குறைந்த கால மீன்பிடி நிவாரணத் திட்டத்தின் கீழ் 28,643 மீனவ குடும்பங்களுக்கு, தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14.32 கோடி நிவாரணத் தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டது.