லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை தாமதப்படுத்தக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளது சுப்ரீம் கோர்ட்.
ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் குறித்து மக்கள் புகார் அளித்தால், அது தொடர்பாக விசாரணை நடத்தி தண்டிக்கக் கூடிய அதிகாரம் லோக்பால், லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகளுக்கு இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர்களை நியமிக்க நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரையும் சேர்த்து குழு அமைக்கப்பட வேண்டும் என்பது தான் லோக்பால் சட்ட அமைப்பு விதி.
அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்களை கொண்ட லோக் பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையில் கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் விளைவாக அப்போதைய காங்கிரஸ் அரசு, லோக் பால் சட்டத்திற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, அதற்கான ஒப்புதலையும் பெற்றது.
லோக் பால் சட்டத்தின்படி, லோக் பால் தலைவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், எதிர்கட்சித் தலைவர், நாடாளுமன்ற சபாநாயகர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக யாரும் இல்லை என்பதால், லோக் பால் தலைவரை நியமிக்க முடியவில்லை என மத்திய அரசு காரணம் கூறி வந்தது.
லோக்பால் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இச்சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என்று இனி மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு தாமதப்படுத்தக் கூடாது”, என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.