புதுடில்லி: அயோத்தி வழக்கு (Ayodhya Case) மற்றும் கர்நாடகாவின் (Karnataka) தகுதியற்ற 17 எம்.எல்.ஏக்கள் மீதான தீர்ப்பின் பின்னர், மேலும் இரண்டு பெரிய வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் நாளை (வியாழக்கிழமை) முக்கியமான தீர்ப்பை வழங்க உள்ளது. அந்த 2 முக்கியமான தீர்ப்பு என்னவென்று பார்த்தால், அது ரஃபேல் (Rafale Case) மற்றும் சபரிமலை வழக்குகள் (Sabarimala Case) ஆகும். இந்த இரண்டு வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மறுஆய்வு மனு விசாரணை தீர்ப்பை நாளை காலை 10:30 மணிக்கு உச்ச நீதிமன்றம் (Supreme Court of India) அறிவிக்க உள்ளது. அதேசமயம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேக்கி தாக்கல் செய்த அவமதிப்பு மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ளது. "சவுகிதார் சோர் ஹை" (காவல்காரன் ஒரு திருடன்) என மோதி குறித்து ராகுல் காந்தி (Rahul Gandhi) கூறியதற்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியிருந்தாலும், அந்த வழக்கு குறித்து இறுதி தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ளது.
உண்மையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 - 50 வயது பெண்கள் நுழைய தடை இல்லை என்றும், அய்யப்பன் கோவிலில் நுழைய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதாவது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் 4: 1 என்ற விகிதத்தில் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு இந்து மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
சபரிமலை ஐயப்பன் பெண்கள் நுழையும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுமார் 56 சீராய்வு மனுக்கள் சுப்ரீம்கோர்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட, 48 மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நாளை (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
அடுத்த முக்கிய வழக்கான ரஃபேல் வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்க உள்ளது. இந்த ரஃபேல் விவகாரம் ஆளும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்யத பிரசாந்த் பூஷண் கூறியது, ரபேல் ஒப்பந்தத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நோக்கில் செயல்படுகிறோம் என்று டிசம்பர் 2018 உச்சநீதிமன்ற உத்தரவு கூறியுள்ளது. ஆனால் அது போன்ற எந்த முயற்சியிலும் நாங்கள் ஈடுபட வில்லை. ரபேல் குறித்து மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதனால் தான் நாங்கள் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறியிருந்தார்.
இந்த இரண்டு வழக்குகளும் மிக முக்கியமானவை ஆகும். அதனால் நாளை உச்ச நீதிமன்றம் வழங்க உள்ள, இந்த வழக்குகளின் தீர்ப்பை நாடே எதிர்நோக்கி உள்ளது.