தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்ட டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் பிரான்ஸை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர்.
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இந்தசூழலில், ஆதார் அட்டைக்காகப் பெறப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்கள், திருடப்பட்டால், அது குடிமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஆதார் அட்டைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. பொதுமக்களின் ஆதார் தகவல்கள் 13 அடி அகலம் கொண்ட கான்கிரீட் சுவர் கொண்ட அறையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும், ஆதார் வழங்கும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.எஸ்.ஷர்மா, புதிய சிக்கலில் சிக்கியிருக்கிறார். ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ட்விட்டரில் நடந்த விவாதத்தின் போது, பயனாளர் ஒருவர் ஆர்.எஸ்.ஷர்மாவிடம், `உங்களது ஆதார் தகவல்களை வெளியிட முடியுமா’ என்று கேட்டிருக்கிறார். இதையடுத்து, தனது ஆதார் எண்ணை வெளிப்படையாக ட்விட்டரில் அறித்த ஷர்மா, இதனால் தனக்கு என்ன தீங்கு இழைத்துவிட முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆர்.எஸ்.ஷர்மாவின் ட்விட்டுக்கு ஹேக்கர்கள் ராபர்ட் பேப்டிஸ்ட் என்று அழைக்கப்படும் எலியாட் ஆண்டர்சன், கனிஷ்க் சஞ்சானி மற்றும் கரண் சய்னி ஆகியோர் பதிலளித்துள்ளனர். அதில், ஆர்.எஸ்.ஷர்மாவின் மொபைல் எண், வீட்டு முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் அவர் பயன்படுத்தும் மற்றொரு மொபை எண் ஆகியவற்றை ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆதார் எண் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் ஹேக் செய்ய முடியும் என அவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், ஹேக்கர்கள் வெளியிட்ட தகவல்கள் உண்மையா என்பதை அறிய, அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், ஆர்.எஸ்.ஷர்மா மற்றும் ஹேக்கர்கள் இடையில் நடைபெற்ற இந்த கான்வோ ட்விட்டரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.