காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவுமான அல்கா லம்பா வாக்குச் சாவடியில் ஒரு ஆம் ஆத்மி தொழிலாளியை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு..!
டெல்லி: 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ஒரு கோடியே 47 லட்சம் வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. டெல்லி போலீசார் 42 ஆயிரம் பேர், ஊரக காவல்படையினர் 19 ஆயிரம் பேர் மற்றும் 190 கம்பெனி மத்திய படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டங்கள் நடைபெற்று வரும் ஷகீன்பாக், ஜாமியா நகர், சீலம்புரி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை 8 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 1 மணி நிலவரப்படி 20.24% சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தின் வெளியே மற்றொரு நபருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர் அல்கா லம்பாவிடம் அவதூறாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அல்கா லம்பா, அந்த ஆம்ஆத்மி தொண்டரை அடிக்கச் சென்றார். இதன்காரணமாக இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
#WATCH Delhi: Scuffle breaks out between AAP and Congress workers near Majnu ka Teela, Congress candidate Alka Lamba tries to slap an AAP worker. AAP leader Sanjay Singh has said the party will complain to Election Commission. #DelhiElections2020 (note: abusive language) pic.twitter.com/l5VriLUTkF
— ANI (@ANI) February 8, 2020
இது குறித்து அல்கா லம்பா கூறுகையில்... "வாக்குப்பதிவு மையத்தில் இருந்து நான் வெளியே வந்தபோது, உள்ளே செல்ல அனுமதி வேண்டி ஆம்ஆத்மி தொண்டர் ஒருவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மற்றொரு ஆம்ஆத்மி கட்சித் தொண்டரான ஹர்மேஷ் என்னிடம் தகாத வார்த்தையில் பேசினார். இதையடுத்து அவரை உடனடியாக கைது செய்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.